நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று (மார்ச் 28) தலைமைத்தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற 41 பேர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, சேலத்தில் நடைபெற்ற விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தஞ்சாவூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், விஜயின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருவர், காவல்துறை வாகனத்தில் மோதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் விஜய் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி 20 நாட்கள் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். பெரம்பூரில் விஜய் பிரச்சாரம் செய்ய 25ஆம் தேதியே தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் 3000 பேருக்கு மேல் நிற்க முடியாது என்று அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதனால், அண்ணா நகர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இயலாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கான அனுமதி கேட்டும், 6 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் புகார் மனு விஜய் தரப்பில் புகார் அளித்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய பின் இன்று முதல் முறையாக தலைமைச் செயலகம் வந்த விஜய் இன்று சிடி நிர்மல்குமார், செங்கோட்டையன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் வந்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
