மத்திய பாஜக அரசின் வாக்களார் சிறப்பு திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீராய்வு திட்டங்களை தவெக கடுமையாக எதிர்க்கிறது என விஜய் பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று (செப்டம்பர் 13) திருச்சி மரக்கடையில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். அதனைத் தொடர்ந்து அரியலூருக்கு இரவு 9 மணியளவில் அரியலூரில் உள்ள பழைய பேருந்து நிலையம் பகுதியை வந்தடைந்தார்.

அங்கு அவருக்காக திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களிடையே அவர் பேசுகையில், “நம்மை ஆண்டுக் கொண்டிருக்கிற பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேக்கவே வந்திருக்கிறேன். இந்த பாஜக கொஞ்ச நஞ்ச கொடுமையா செய்யுது. பீகாரில் 65 லட்ச வாக்காளர்கள், வாக்காளர் அட்டையிலேயே இல்லையாம். எதிர்க்கட்சிகள் சொல்றாமாறி ஓட்டுத்திருட்டு நடந்துள்ளது. வீட்டுநம்பர் 0 என குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டை கொடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் மோசமான வேலை.
2029ல் மத்தியில் இவர்களின் ஆட்சிக்காலம் முடியப் போகிறது. இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். அதற்குள் எதிர்க்கட்சிகளை ஒரேடியாக அழிச்சிட்டு, ஒரே நாடு ஒரே தேர்தல் வைத்து, ஒரே நேரத்தில் தில்லுமுல்லு செய்ய நினைக்கின்றது பாஜக. இதற்கு பெயர் தான் ஜனநாயக படுகொலை.
தொகுதி மறுசீராய்வு என்ற பெயரில் வட இந்தியாவுக்கு மட்டும் அதிக தொகுதிகள் கிடைக்கும்படி மோசடி செய்கிறார்கள். தென் இந்தியாவின் சக்தியை குறைக்க செய்யப்படும் மோசடி வேலை இது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக அரசு செய்யும் துரோகம் இது. தவெக இது எல்லாவற்றையும் எதிர்க்கிறது” என விஜய் பேசினார்.