மூன்றாவது முறையாக நீங்கள் ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? அல்லது நமது இஸ்லாமிய சகோதர்களுக்கு எதிராக சதி செய்யவா? என பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு மதுரையில் இன்று (ஆக்ஸ்ட் 21) நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் விஜய் தலைமையேற்று உரையாற்றினார்.
அப்போது, ‘எதிர்காலம் வரும், என் கடமை வரும்.. இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன்’ என்ற எம்.ஜி.ஆரின் பாடலைப் பாடி மத்தியில் ஆளும் பாஜக அரசு மற்றும் தமிழகத்தை ஆளும் திமுக அரசை நோக்கியும் கேள்வி எழுப்பினார் விஜய்.
செய்வீர்களா மோடி?
அவர், “மக்கள் அரசியல் என்ற சவுக்கை மறைமுக உறவுக்காரர்களான பாசிச பாஜக மற்றும் பாய்சன் திமுகவை நோக்கி வீசுகிறேன்.
பிரதமர் மோடி அவர்களே, மூன்றாவது முறையாக நீங்கள் ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? அல்லது நமது இஸ்லாமிய சகோதர்களுக்கு எதிராக சதி செய்யவா? அந்த மக்களின் ஒருவனாக சில கேள்விகளை கேட்கிறேன்.
நமது தமிழ்நாட்டு மீனவர்கள் 800 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் தாக்கி கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதை கண்டிப்பதற்காக உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன். இனிமேலாவது எங்கள் மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுக்கொடுங்கள் அது போதும்!
உங்களின் முரட்டு பிடிவாதத்தால் நீங்கள் நடத்தி வரும் நீட் தேர்வால் தமிழ்நாட்டில் என்னென்ன நடக்கிறது என்பதை சொல்லவே மனசு வலிக்கிறது. அந்த நீட் தேர்வே தேவையில்லை என்று அறிவித்து விடுங்கள் அது போதும். செய்வீர்களா மோடி?
தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது…
எங்களுக்கு என்னென்ன தேவையோ, எது நல்லதோ அதை செய்ய மாட்டேன் என்கிறீர்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்ற நேரடியாக பாசிச பாஜக அடிமைக் கூட்டணி, மைனாரிட்டி ஆட்சியை ஓட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் அடிமை குடும்பம் என மக்கள் சக்தியே இல்லாத கூட்டணி வைத்து 2029 வரை சொகுசு பயணம் போகலாம் என திட்டம் போட்டு வைத்திருக்கிறீர்கள்?
உங்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்கிறேன். நீங்க என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும், தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவார்கள்?
உங்கள் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது!
தமிழ்நாட்டில் இருந்து ஒரு பாஜக எம்.பியைக் கூட தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்து வருகிறது இந்த பாஜக அரசு.
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மண் இந்த மதுரை மண். கீழடியில் கிடைத்த ஆதாரங்களை எல்லாம் மறைத்து விட்டு, எங்களது நாகரிகத்தையும், வரலாற்றையும் மறைத்துவிட்டு உள்ளடி வேலை செய்யலாம் என நினைக்கிறீர்கள். தமிழ்நாட்டை தொட்டால் என்ன நடக்கும் என்பதற்கு பல உதாரணம் உள்ளது. மத நல்லிணத்திற்கு பெயர் பெற்ற இந்த மண்ணில் இருந்து சொல்கிறேன். உங்கள் எண்ணமெல்லாம் ஒருநாளும் ஈடேறாது” என விஜய் பேசினார்.
