பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு பெயர் குறிப்பிடாமல் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay Alliance Talks

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகராகவும், அரசியல் விமர்சகருமான பொன்ராஜ் தவெக பெண் தொண்டர்களை கடுமையாக விமர்சித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பொன்ராஜின் இந்த பேச்சுக்கு அவரது பெயரை குறிப்பிடாமல் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று (மார்ச் 26) கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ADVERTISEMENT

த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.”என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் பதிவில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் பெண்களை ‘விபச்சாரிகள்’ என்று வக்கிரமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜ் அவர்களின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும், தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.

எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது?

ADVERTISEMENT

இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுக-வுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?

கண்ணியத்திற்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அநாகரீக அரசியலின் உச்சமாக தமிழக பெண்களை ‘விபச்சாரிகள்’ என்று மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், பெண்கள் மீது மோசமான பார்வை கொண்டவர்களுக்கு தங்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் தமிழக மகளிர்.”என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share