கூட்டணி கட்சித் தலைவி சசிகலாவுடன் பேசி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்படும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ராமதாஸ் தரப்பு பாமக மற்றும் சசிகலா இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று (மார்ச் 26) தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக மக்களுக்காக நான் பாடுபடுகிறேன். என் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இதேப்போல் எங்களுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தோழமைக் கட்சிகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இன்னும் சில கட்சிகள் எங்களுடன் வர வாய்ப்புள்ளது. இல்லாமலும் போகும். விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். கூட்டணி கட்சி தலைவி சசிகலாவுடன் கலந்து பேசி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவுக்கு வருவோம்” என்றார்.
அவரிடம் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, “நீங்களாக கூட இருக்கலாம்” என்று செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக பதிலளித்தார்.
இந்த சந்திப்பின் போது , பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கெளரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் முரளி சங்கர், அரசியல் பிரிவு தலைவர் தீரன் ஆகியோர் உடனிருந்தனர்.
