தமிழக வெற்றிக் கழகத்தின் ‘மக்கள் சந்திப்பு பிரச்சாரம்’ தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி மாலை கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் விஜய்.
அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இப்படியொரு துயர சம்பவத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியம், தாமதமான வருகை ஆகியவையே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 50 மீட்டருக்கு முன்னதாகவே பிரச்சார பேருந்தை டிஎஸ்பி நிறுத்த சொன்னபோதும் அவர்கள் வாகனத்தை நிறுத்தவில்லை என போலீசார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதிசனின் ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்தசூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று (அக்டோபர் 1) தவெக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், ‘நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை கட்சித் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தவெக தலைவர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.