கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி ராணி, விஜய் கலந்து கொண்ட பரப்புரை கூட்டம் நடந்த இடத்தில் ஸ்ப்ரே அடித்தார்கள். கணவரின் கைது குறித்து தன்னிடம் தகவல் தெரிவிக்க வில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்நிலையில் இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜியிடம் கூட்டத்தின் போது ஸ்ப்ரே அடித்ததாக மதியழகனின் மனைவி குற்றம் சாட்டியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கையில், “இன்று காலையில் எனது நண்பர் ஒருவர் பேசும்போது கத்தியில் கிழித்து இருந்தார்கள் என சமூக வலைதளங்களில் பார்த்ததாக சொன்னார். நான் அவரிடம் கத்தியில் கிழித்து இருந்தால் அவர்கள் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவருக்கு ரத்தக்காயம் ஏற்படுகிறது என்றால் அரசு மருத்துவமனையோ, தனியார் மருத்துவமனையோ என்று ஏதாவது ஒரு இடத்தில் அவர் சிகிச்சைக்கு போயிருக்க வேண்டும் அல்லவா..
மாவட்ட செயலாளரின் மனைவி இரண்டு நாள் கழித்து கூறுவதற்கு காரணம் என்ன? பாதிக்கப்பட்ட அன்றே அந்த மாவட்ட செயலாளர் மனைவி மருத்துவமனைக்கு வந்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களை பார்த்திருக்கலாம். இரண்டு நாட்கள் கழித்து தன்னுடைய கணவர் கைது செய்யப்படுகிறார் என்று தெரிந்தவுடன் தற்போது இந்த கருத்துக்களை முன்னெடுப்பவர், இரண்டு நாட்கள், மூன்று நாட்களாக எங்கே போனார்கள்.
அவரது மனைவி அதற்குரிய ஆவணங்களை விசாரணை ஆணையத்திடம் சொல்லலாம். ஒருவேளை யாராவது ஸ்பிரே அடித்திருந்தால் ஊடகங்களின் லைவ்வில் வந்திருக்க வேண்டும் அல்லவா.. ஏதோ ஒரு சேனல் அல்லது youtube லைவ் என ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் அல்லவா.. அப்படி இருந்தால் அவர் விசாரணை ஆணையத்திடம் ஆவணங்களை சமர்ப்பிக்கட்டும். ஆணையம் விசாரணை நடத்தும் என்றார்.
