நாமக்கல்லில் நடந்த விஜய் பிரச்சார கூட்டத்தின் போதே அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக அம்மாவட்ட போலீசார் கூறியுள்ளனர்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் கரூருக்கு முன்னதாக விஜய் நடத்திய நாமக்கல் பிரச்சார கூட்டத்திலேயே அசாதாரண சூழல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று நாமக்கல் போலீசார் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக நாமக்கல் போலீசார், பிஎன்எஸ் சட்டம் 189(2), 126(2), 292,285 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர் சதிஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதில், “நாமக்கல் டூ சேலம் ரோடு கே.எஸ்.தியேட்டர் அருகே தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தை முன்னிட்டு காலை 7 மணி முதலே நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாந்தகுமார் மற்றும் தலைமை காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்வதற்காக 250 போலீசார் பிரச்சாரம் நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர்
20 நிபந்தனைகளுடன் தவெக கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பல்வேறு தொலைக்காட்சிகளில் விஜய் 12 மணிக்கு நாமக்கலில் பிரச்சாரம் மேற்கொள்ள வருவார் என்று சொன்னதை அடுத்து காலை 7 மணி முதல் மக்கள் வர ஆரம்பித்தனர்.
நாமக்கல் – சேலம் ரோடு, மெயின் ரோடு, திருச்சி ரோடு, ரமேஷ் தியேட்டர், நாகராஜபுரம் ஆகிய இடங்களில் அதிக அளவில் கூட்டம் வர தொடங்கியது.
கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்டோர் நாமக்கல் மாவட்ட எல்லையான மேட்டுப்பட்டி, வளையப்பட்டி, புதுப்பட்டி, நாகராஜபுரம், ரமேஷ் தியேட்டர் மெயின் ரோடு வழியாக நுழைந்து வேண்டுமென்றே கால தாமதம் செய்து பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி அதிக இடங்களில் நிபந்தனைகளை மீறியும் நடந்து கொண்டனர்.
பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்ட இடமான கே.எஸ் தியேட்டர் முன்பு மதியம் 14.45 மணிக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்திற்கு நடுவே பரப்புரை வாகனத்தை நிறுத்தி வேண்டும் என்றே காலதாமதம் செய்தனர்.
அதனால் அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது.
மக்களிடையே தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர். இதனால் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல், கொடுங்காயம், உயிர் சேதம் ஏற்படும் என்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோரிடம் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரிகள் எச்சரித்து, அறிவுரை வழங்கிய போதும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.
தொடர்ந்து அசாதாரண செயலில் ஈடுபட்டதால் போலீசரால் போதிய பாதுகாப்பு வழங்கியபோதும், அக்கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் யாரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தவில்லை.
தொண்டர்கள் அருகில் உள்ள ஷ்யாமலா பல் மருத்துவமனை பெயர்ப்பலகையில் ஏறியதால் அது சரிந்து கீழே நின்றிருந்த பொதுமக்கள் மீது விழுந்ததால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
தமிழக வெற்றிக்கழக கட்சியின் நாமக்கல் மாவட்ட ஏற்பாட்டாளர்களுக்கு, விஜய் பரப்புரை கூட்டம் நடத்த காலை 11 மணி முதல் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் பரப்புரை நிகழ்ச்சி நடத்த கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் அக்கட்சியின் ஏற்பாட்டளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் நாமக்கல் வருவதை நான்கு மணி நேரம் தாமதப்படுத்தினர்.
இதன் காரணமாக அங்கு பல மணி நேரமாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும் தாகத்திலும் சோர்வடைந்தனர். அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட காரணத்தால் மக்களின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டது.
போதிய தண்ணீர் வசதி மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலேயே அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், கரூரில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்திருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் போலீசார் தரப்பில்.