கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தால் பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது. விஜய்யை பார்க்க மகிழ்ச்சியாக வந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதால் இதுவரை 31 பேர் உயிழந்திருக்கின்றனர்.
விஜய்யின் பேச்சை கேட்டு தொண்டர்களும், ரசிகர்களும் ஆரவாரம் செய்து கொண்டிருந்த வேளையிலேயே கூட்டத்திலிருந்து ஒவ்வொரு ஆம்புலன்சாக மருத்துவமனையை நோக்கி புறப்பட்டது.
நேரம் ஆக ஆக மயக்கமடைந்தவர்களை அழைத்துக் கொண்டு கரூர் அரசு மருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸுகள் அணிவகுத்தன.
தற்போது வரை 31 பேர் உயிரிழந்திருப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், மேலும் பல பேர் மயக்க நிலையில் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து வருகிறார். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இந்தநிலையில் விஜய் பிரச்சார ஏற்பாடுகள் சரியாக இல்லாததே இந்த துயரத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.
இவ்வளவு பேர் கூடுகிறார்கள் என்றால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் எதையும் செய்யவில்லை. சொன்ன நேரத்தை தாண்டி 10 நேரத்துக்கு பிறகுதான் உரையாற்றிய இடமான வேலுசாமிபுரத்துக்கு விஜய் வந்தார் என்று கூட்டத்துக்கு சென்றவர்கள் கூறுகிறார்கள்.
ஏற்கனவே தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் கடந்த ஆண்டு, சந்தியா தியேட்டரில் ‘புஷ்பா 2’ திரைப்படம் பார்க்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அந்த படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனை அந்த மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் 31 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தரப்பில் கேட்டபோது, ‘கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது புகார் கொடுக்க வேண்டும். அதைத்தொடர்ந்து பலரும் புகார் கொடுக்கும் பட்சத்தில், அதன்மீது வழக்குப்பதிவு செய்து தவெக தலைவர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்படலாம். ’ என்கின்றனர்.
முன்னதாக தவெக பிரச்சார்த்துக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை வழங்கியிருந்தது.
விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது.
விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தொண்டர்கள் பைக், 4 சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வரக்கூடாது.
பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகளை தவெகவினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதை தவிர்த்திட வேண்டும் உட்பட 21 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
ஆனால் இதை தவெக தொண்டர்கள் கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.