நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது ஒரு கருத்தியல் போட்டி (Ideological Struggle) என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்பி கூறியதாவது: துணை ஜனாதிபதி தேர்தலில் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக நிறுத்துவது என்று இந்தியா கூட்டணி ஒருமித்த கருத்தாக முடிவெடுத்துள்ளது. இது ஒரு கருத்தியல் ரீதியான போட்டி.
ஆர்.எஸ்.எஸ். இயக்க பின்புலத்துடன் வந்த ஒருவரை தற்போது குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக பாஜக நிறுத்தி இருக்கிறது. அவர் ஒரு தமிழராக இருந்தாலும், அவர் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் ? தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக என்ன செய்தார் ? என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பிளவுவாத அரசியல் இல்லாத ஒரு நபரை தேர்ந்தெடுத்து இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தியுள்ளோம். நீதிபதி சுதர்சன ரெட்டி ஏழை மக்கள், நலிவடைந்தோருக்கான பல்வேறு விவகாரங்களில் பல தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அதன் அடிப்படையில் தான் தற்போது அவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம்.
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்வில் இறுதி பட்டியலில் யார் யார் இருந்தார்கள் என்பது முக்கியமல்ல. மாறாக இறுதியாக ஒருமித்த கருத்தாக சுதர்சன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், இதுவே இறுதியானது. இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
ரவிக்குமார் எம்.பி.
இதேபோல விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், “அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்த மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி அவர்களுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போட்டி ஒரு கருத்தியல் போட்டியாகும். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நினைப்பவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் தெளிவாகவே இருப்பார்கள்” என பதிவிட்டுள்ளார்.