இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) திமுக கூட்டணியின் எம்.பி.க்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன், அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி களம் காண்கின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக களம் காண்கிறார். இதனால் தமிழக எம்.பிக்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து ‘தமிழர்’ என்ற அடிப்படையில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பாஜகவின் வேண்டுகோள்.
ஆனால், தமிழர் விரோத பாஜகவின் வேட்பாளர்தான் சிபிஆர் என்கின்றன திமுக கூட்டணி கட்சிகள்.
இந்தியா கூட்டணியின் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆதரவு தருகின்றன.
இப்பின்னணியில் சுதர்சன் ரெட்டி, இன்று சென்னை வருகை தந்தார். சென்னையில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணியின் எம்.பி.க்களை சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி.