தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசிக்கு மாநில அரசு அளித்த அனுமதியை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கண்டறிந்துள்ளது. தமிழக பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது.

குறிப்பாக திறந்த வெளி அனுமதி அடிப்படையில் 10 ஆவது சுற்று ஏல அறிவிப்பில் இராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள நிலப் பரப்பில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எண்ணெய், எரிவாயு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இந்த பகுதிகளை ஒன்றிய அரசு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
இதனால் மீனவர்கள் வாழ்வாதாரமும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும்.
சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் அறிக்கை அளித்துள்ளனர்.
எனவே ஒன்றிய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி., ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள சுற்றுச்சூழல் அனுமதியை மறு ஆய்வு செய்து, திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை: இராமநாதபுரத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் முன்மொழிந்த நிலையில் அதற்கான சூழலியல் அனுமதியை மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம், அதன் தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தினை முன்னெடுப்பது மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரே கடல்சார் உயிர்கோளக் காப்பகம் மன்னார் வளைகுடாவாகும். இது அரிய மற்றும் அழியும் நிலையிலுள்ள உயிரினங்களை, குறிப்பாக பவளப் பாறைகள், மீன்கள், கடல் மிருகங்கள் மற்றும் பல்வேறு கடல் உயிரினங்களைக் கொண்டுள்ளது. திட்டமிடப்பட்டக் கிணறு தோண்டும் இடங்களுக்கு அருகில் உள்ள இந்தப் பகுதி மிகவும் பாதிக்கப்படக்கூடியது. இந்த செயல்பாடுகள், கடல் சுற்றுச்சூழலை சீர்குலைக்கும். மேலும் இத்திட்டம், கிணறு தோண்டும் இடங்கள், குழாய்கள் மற்றும் செயலாக்க ஆலைகளுக்குப் பெரும் நிலப்பரப்பு தேவைப்படுத்துகிறது. இது கடற்கரையோர வாழ்விடங்களை அழித்து, உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கும். 2019ல் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹைட்ரோகார்பன் திட்டத்தினை சட்டசபையில் எதிர்த்து அதிமுக அரசிடம் குரல்கொடுத்தது முதல், 2023ஆம் ஆண்டு இத்திட்டம் குறித்துக் கேள்வி எழுந்த நிலையில் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கிட மாட்டோம் என்று ஆளும் கட்சியாக உறுதியளித்தது வரையில் திமுக அரசு கூறிவந்த கூற்றுக்கு மாறாக தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசினால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும் மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் இதற்கான அனுமதியை வழங்கியிருப்பது மேலும் கண்டனத்திற்குரியதாகும். மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் முழு அதிகாரம் மாநில அரசிடம் இல்லை என தமிழ்நாடு அரசு கூறுமானால் அதனை மாற்றி அமைக்கும் முன்னெடுப்புகளையும் தமிழ்நாடு அரசு செய்யவில்லையா? மேலும் இவற்றை நிறுவக்கூடிய விதிகளான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2006ஐ உருவாக்கியபோது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சராக திமுகவை சேர்ந்த ஆ.ராசா அவர்கள் இருந்த நிலையிலும் இதனைக் கருத்திற்கொள்ளவில்லையா எனும் கேள்வியும் எழுகிறது. இனியும் மக்களை வெற்றுச் சொற்கள் கொண்டு ஏமாற்றாமல், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் திமுக அரசு முன்வர வேண்டும். இத்திட்டத்திற்கான சூழலியல் அனுமதியை திரும்பப்பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், இத்திட்ட முன்மொழிவை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறேன். தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று பேரறிவிப்பு செய்கிறேன்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர் கே.வீ. இளங்கீரன்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்திருந்தது அதனை ஏற்கக் கூடாது என்று விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக கோரிக்கை வைத்திருந்தோம்’
அதனையும் மீறி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. ஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப் (HELP) அடிப்படையில் மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலம் (OALP) மூலம் ஓஎன்ஜிசி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 143.41 சதுர கிலோமீட்டர் அளவிற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்று இருக்கிறது. தற்போது அந்த பகுதியில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகள் தோன்ற ஓஎன்ஜிசி திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ராமநாதபுரம் முதுகுளத்தூர் பரமக்குடி கீழக்கரை மற்றும் தேவகோட்டை தாலுகாக்கள் புதிய கிணறு அமைக்க ஓஎன்ஜிசி சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது.
வழக்கமாக ஒன்றிய அரசு புதிய parivesh தளத்தில் இந்த அனுமதியை ஆவணத்தை பதிவேற்றம் செய்யாமல் யாரும் அதிகம் பயன்படுத்தாத பழைய சுற்றுச்சூழல் அனுமதிக்கான தளத்தில் (envirnomentclearance,nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஏதோ உள்நோக்கத்தோடு மறைத்து செயல்படுவதாக தெரிகிறது. தமிழக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு காவிரி டெல்டாவை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்ற எந்த ஹைட்ரோ கார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கிணறுகள் தொடர்ந்து செயல்பட முடியும் என்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் விவசாயிகள் சங்கம் சார்பாக காவிரி டெல்டாவை பாதுகாக்க அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளையும் மூட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்
மேலும் சட்டம் அறிவித்தபடி திருவாரூர் நாகை தஞ்சாவூர் கடலூர் மாவட்டத்தில் ஐந்து வட்டாரங்கள் காட்டுமன்னார்கோவில், மேல புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஒன்றியங்கள் அறந்தாங்கி ஆவுடையார் கோவில் மணமேல்குடி திருவரங்குளம் கரம்பக்குடி ஆகிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாக அறிவிக்கப்பட்டன இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தனி மாவட்டமாக ஆனதால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியாக அதை குறிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு சட்டத்தில் ஒரு திருத்தத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் இச்சட்டம் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தில் விடுபட்டுள்ள ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைவுள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகள் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் நாங்கள் பாண்டிச்சேரியில் இருந்து ராமநாதபுரம் வரை மனித சங்கிலி போராட்டம் அறிவித்தபோது அனைத்து மாவட்டத்திலும் திமுக முன்னணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பை தெரிவித்தார்கள். ஆனால் அதற்கு மாறாக இப்பொழுது புதிய ஆய்வுக்கு அனுமதி வழங்கப்படுவது விவசாயிகளை மிகவும் வேதனடையை செய்து இருக்கிறது உடனடியாக இதனால் தமிழக விவசாயிகள் பெரும் இன்னல் உட்படுத்தப்படுவார்கள் என்பதனை கருத்தில் கொண்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உடைய குரலை மீறி ஓஎன்ஜிசி நிறுவனம் இங்கு கிணறுகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டால் களத்தில் கடுமையான எதிர்ப்புகளும் போராட்டங்களையும் நடத்துவதற்கு விவசாயிகளும் அனைத்து அமைப்புகளும் திரட்டி கடுமையான போராட்டத்தை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
