ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின்118 ஆவது ஜெயந்தி மற்றும் 63 ஆவது குரு பூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று குருபூஜை விழா நடைபெறுகிறது. இதனால் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தேவர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 30) மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பசும்பொன் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
குடியரசு துணைத் தலைவர் மரியாதை
இன்று காலை பசும்பொன் நினைவிடத்தில், முத்துராமலைங்க தேவர் திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
