துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து புகழ்ந்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தனது சொந்த மாவட்டமான திருப்பூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற சிபி ராதாகிருஷ்ணன், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தலைவர்களின் நல்ல குணங்களை எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
அப்போது, தமிழக அரசியலில் வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி வந்தாலும், எந்த ஒரு பின்னடைவிலும் தளராமல், அடுத்த நாளே ‘தம்பி கலங்காதே, எழுந்திடு, தமிழினத்தைக் காப்பது நமது பொறுப்பு’ என முரசொலியில் எழுதி தொண்டர்களுக்கு உத்வேகமளித்தவர் கலைஞர். அவரது உழைப்பையும், மன உறுதியையும் துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
அரசியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும், கலைஞரின் நிர்வாகத் திறனை சி.பி. ராதாகிருஷ்ணன் வெளிப்படையாகப் பாராட்டினார். குறிப்பாக, திருப்பூரின் சாய ஆலைத் தொழில்கள் சவால்களை சந்தித்தபோது, சாய சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க கலைஞர் எடுத்த முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார். இது திருப்பூரின் உள்ளூர் பொருளாதாரத்திற்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பை மீண்டும் நினைவூட்டியது.

இதனிடையே துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தென் மாவட்ட பயணங்களின் போது மதுரையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி உடன் இருந்தார்.
சிபிஆர் டேபிளில் கலைஞர் படம்
முன்னாள் முதல்வர் கலைஞர் மீது சி.பி.ராதாகிருஷ்ணன் எப்போதும் உயர்ந்த மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு சில நிகழ்வுகள் சொல்லப்படுவது உண்டு.
மகாராஷ்டிரா மாநில ஆளுநராக சிபிஆர் பதவி வகித்த போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் அவரை சந்தித்தனர்.
மகாராஷ்டிரா ராஜ்பவனில், கலைஞருடன் தாம் இருக்கும் படத்தையும் வைத்திருந்தார் சிபிஆர்.
இதனை சுட்டி தமிழக நண்பர்கள், சிபிஆரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘என்னுடைய அரசியல் வழிகாட்டி யார் என நினைக்கிறீர்கள்?’ என அவர்களிடம் சிபிஆர் பதில் கேள்வி கேட்டுள்ளார்.
இந்த கேள்விக்கு, ‘வாஜ்பாய்’ , ‘அத்வானி’ என பதில்கள் சொல்லப்பட்டன.
ஆனால், ‘கலைஞர்தான் என் அரசியல் வழிகாட்டி’ என்று பட்டென சொன்னாராம் சிபிஆர். வெற்றி- தோல்வி எதுவந்தாலும் எப்போதும் ஒரே உறுதியான நிலைப்பாட்டை கொண்டவர்தான் கலைஞர் என்று சொன்ன சிபிஆர் அப்போது மற்றொரு சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டாராம்.
பாஜகவில் சிபிஆர், சிறிது காலம் ஓரம்கட்டப்பட்டு இருந்தார். அக்கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. அந்த தருணத்தில், சிபிஆரை கலைஞர் அழைத்து, ‘விரும்பினால் திமுகவுக்கு வந்துவிடுங்கள்.. உங்களுக்கு உரிய மரியாதையை தருகிறோம்’ என அழைப்புவிடுத்தாராம்.
ஆனால், ‘நான் ஏற்றுக் கொண்ட கொள்கை வேறு.. திமுக வேறு.. அது சரியாக வராது.. என கலைஞரின் அழைப்பை நிராகரித்துவிட்டதாகவும் சிபிஆர் கூறினாராம்.
அத்துடன், தந்தையைப் போல திமுக கொள்கையை வலிமைப்படுத்த, கட்சியை வலிமைப்படுத்த கலைஞர் வழியில் அவரது மகன் முதல்வர் ஸ்டாலினும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் எனவும் பாராட்டினாராம் சிபிஆர்.
