நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தலில் மகாராஷ்டிரா ஆளுநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் (CPR சிபிஆர்) தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் செப்டம்பர் 9-ந் தேதி துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ததின் பின்னணியில் மோடியின் அரசியல் கணக்குகள் இருப்பது குறித்து பொதுவாக பேசப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வலுவாக காலூன்றுவதற்கு வாய்ப்பாகவும் துணை ஜனாதிபதி தேர்தலை மோடி பயன்படுத்துகிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இன்னொரு பக்கம், சி.பி. ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி தேர்வு செய்ததன் பின்னணியில் வேறு சில காரணங்களும் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றி நம்மிடம் பேசிய டெல்லி பாஜக வட்டாரங்கள், சி.பி.ராதாகிருஷ்ணனை மோடி தேர்வு செய்ததன் பின்னணி குஜராத்தில் இருந்து தொடங்குகிறது. 2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார். 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகள் நடந்த போது முதல்வர் பதவியை மோடி ராஜினாமா செய்ய 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 2002-ம் ஆண்டு குஜராத்தின் மணிநகர் தொகுதியில் போட்டியிட்டு மோடி 75,333 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2007, 2012 சட்டமன்ற தேர்தல்களிலும் மணிநகர் தொகுதியிலேயே போட்டியிட்டு மோடி அமோக வெற்றி பெற்றார். அதுவும் சுமார் 85,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை அறுவடை செய்தார் மோடி. 2014-ல் பிரதமரானதால் மோடி மணிநகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
அகமதாபாத்தின் ஒரு பகுதியாக உள்ளது மணிநகர் தொகுதி. இங்கு தமிழர்கள் கணிசமான வாக்காளர்களாக உள்ளனர். இதனால் குஜராத்தில் இப்போது தேர்தல் நடந்தாலும் மணிநகர் தொகுதியில் தமிழக பாஜக தலைவர்கள் முகாமிட்டு பிரசாரம் செய்கின்றனர்.
மணிநகர் சட்டமன்ற தொகுதியில் மோடி போட்டியிட்ட போதெல்லாம் தமிழகத்தின் பாஜக முகங்களில் சீனியராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், அந்த தொகுதிக்கு போய் முகாமிட்டு தமிழர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் மோடிக்கு கொண்டு சேர்த்து வெற்றிக்கான முதன்மை காரணகர்த்தாவாகவும் இருந்தார். இதனால் குஜராத் முதல்வராக இருந்த காலம் முதலே மோடியுடன் நெருக்கமான, நல்ல குட்புக்கிங்கில் இருந்து வருகிறவர் சிபிஆர்.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் போது, தேர்தலில் வென்றால் கேபினட் அமைச்சர் ஆவது உறுதி என சிபிஆருக்கு சொல்லப்பட்டிருந்தது. ஆனால் தேர்தலில் சிபிஆர் வெற்றி பெறாமல் போனதால்தான் ஆளுநர் பதவிகளில் அடுத்தடுத்து அமர வைக்கப்பட்டார்.
பிரதமர் மோடிக்கு மிக நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்ததால் தற்போது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் சிபிஆரை வேட்பாளராக மோடி தேர்வு செய்தார் என்கின்றன.