திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேசமயம், பாஜகவின் NDA கூட்டணியில் தவாக இணையாது என்றும் வேல்முருகன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2019, 2021, 2024 நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் பங்கேற்று வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி, இரண்டு தொகுதிகளை ஒதுக்கக் கோரியது. ஆனால், திமுக தரப்பில் ஒரு தொகுதி மட்டுமே தரப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்று கட்சியின் தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேசமயம், பாஜகவின் NDA கூட்டணியில் தவாக இணையாது என்றும் வேல்முருகன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் இன்று (மார்ச் 22) செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட 10 அம்சக் கோரிக்கைகளை திமுக புறக்கணித்துள்ளது. எங்கள் கட்சியைப் பொறுத்தவரை, தமிழ்நாடு விடுதலைப் படை, மாவோயிஸ்ட் இயக்கங்கள், தமிழ்நாடு மீட்சிப்படை உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளின் அரசியல் ஆளுமைகளையும், முக்கிய நிர்வாகிகளையும் கொண்ட ஒரு தலைமைக்குழுவாக இயங்கி வருகிறது.
இந்த நிமிடம் வரை திமுகவின் மூத்த தலைவர்கள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், ‘காத்திருக்கும் வேல்முருகன்’ என்று எனது சுயமரியாதைக்கும் தன்மானத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கும் நான், ஆறு முறை தேர்தலைச் சந்தித்தவன். தலைவர் கலைஞர், மறைந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழ்ச் சமூகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் அரசியலில் பணியாற்றியவன். எனவே, எங்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும்.
அதிமுக மூன்று இடங்கள் தருகிறது, வேல்முருகன் அதிமுகவுடன் போகிறார், விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பன போன்ற பொய்யான செய்திகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எங்கள் கட்சியைப் பொறுத்தவரை, எந்த முடிவையும் ஒரு முறைக்கு இருமுறை அல்லது மூன்று முறை யோசித்து, அனைத்து நிலைப் பொறுப்பாளர்களையும் அழைத்து கருத்துகளைக் கேட்ட பிறகே அறிவிப்போம். கடந்த 15 நாட்களாகத் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, நிர்வாகிகள் அனைவருடனும் கலந்தாலோசித்த பிறகே இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். இதனால் என்னைப் ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று’ என்கிற வகையில் ஒப்பிட்டுப் பேச வேண்டாம்.
என்னைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டு மற்றும் முந்தைய 10 ஆண்டு காலச் சட்டமன்றப் பணியும் மக்களுக்கானதாகவே இருந்தது. மக்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள். சமரசமின்றி, திமுக தலைமையிலான கூட்டணியில் குறைந்தபட்சச் செயல்திட்டத்தின் அடிப்படையில் ஆதரவளித்தோம். ஆனால், சில கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு, பெரும்பான்மையான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், ‘இடங்கள் பெரிதல்ல, கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்’ என்று கேட்டபோது, ‘நீங்கள் சிறிய கட்சி, பெரிய கட்சியைப் பார்த்து டிமாண்ட் வைக்கிறீர்களா?’ என்ற பெரியண்ணன் பாணியில் திமுக எங்களைக் கையாள்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
மற்றபடி இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் கட்சிகளுடன் மதச்சார்பற்ற அணியில் பயணித்தோம். இந்திய ஒன்றியத்திடமிருந்து தனிநாடு கோரிய போராளி இயக்கத்திலிருந்து உருவானவன் நான். என்னை மற்ற தலைவர்களுடன் ஒப்பிட்டு எடைபோட வேண்டாம்.
சட்டமன்றத்தில் தமிழீழத் தேசியத் தலைவரை நினைவுகூர்ந்து பேசினேன். தமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவர் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரை நினைவுகூர்ந்தேன். மாவீரன் வீரப்பனுக்கு நினைவு இல்லம் ஏற்படுத்த வேண்டும் எனக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தேன்.
எனக்குப் பணமோ, பதவியோ எதுவும் தேவையில்லை. தனிப்பட்ட வேல்முருகனாகிய நான், ஓட்டு அரசியலில் இருந்து விலகி, இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் மொழிக்கும் இனத்திற்கும் மானத்தோடு போராடி மடிவதற்குத் தயாராக என்னை அர்ப்பணித்தவன்.
என்னை ‘இங்கு இல்லை என்றால் அங்கு போய்விடுவார்’ என்று சித்தரிக்க வேண்டாம். சசிகலா தலைமையில் கூட்டணி என்றெல்லாம் பேச வேண்டாம். சாதி-மதச் சண்டைகள் இல்லாத, தமிழர் வாழ்வுரிமைக்காகவும், மொழி வழி சிறுபான்மையினரின் வாழ்வுரிமைக்காகவும், உலகத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும் போராடும் ஒருவனைப் புரிந்துகொண்டு, எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செய்திகளை வெளியிடுங்கள்.
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களை நம்பியே இந்த முடிவை எடுத்துள்ளோம். எந்தக் கட்சியும் எங்களை அழைத்து கூடுதல் இடங்கள் கொடுக்கும் என்பதெல்லாம் எங்கள் நோக்கம் அல்ல. மதத்தின் பெயரால் இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இடம்பெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.
எங்கள் கட்சி கூடி, ஆதரவு தந்த அரசியல் கட்சிகள், அமைப்புகளுடன் கலந்துபேசி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, யாருடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவது, யாருடன் தேர்தலுக்கு மட்டுமே தொகுதி உடன்பாடு என்பதெல்லாம் குறித்து ஆலோசித்துத் தேர்தலை எதிர்கொள்வோம்” என்றார்.
