திமுக கூட்டணியில் தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார்.
திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தது. ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளை விட கூடுதலான இடங்களைக் கேட்டது சிபிஎம். இதனை திமுக ஏற்கவில்லை.
இதனையடுத்து கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டதைப் போலவே 6 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் சிபிஎம் உறுதியாக இருக்கிறது. திமுக குழுவுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது சிபிஎம். இதன் பின்னர் சிபிஎம் கட்சியின் அவசர அரசியல் செயற்குழு கூட்டம் நேற்று சுமார் 13 மணிநேரம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் 6 இடங்களை கேட்டுப் பெறுவது; 6 இடங்களை திமுக ஒதுக்காத நிலையில் அடுத்ததாக என்ன முடிவு எடுப்பது என்பது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “ஏற்கனவே திமுகவின் பேச்சுவார்த்தை குழுவுடன் சிபிஎம் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் எங்களுடைய மாநில குழு கூட்டம் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 1 மணிக்கு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுடன் பேசுவதன் மூலமாக ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்ற முழுமையான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
திமுக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை குறைப்பதை எங்களது மாநிலக் குழு ஏற்கவில்லை. இதை முதல்வர் ஸ்டாலினிடம் பேசி சுமூகமான முறையில் தீர்வு காண முயற்சி மேற்கொள்வோம் என்றார்.
இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு சிபிஎம் நிர்வாகிகளுடன் சென்ற பெ.சண்முகம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார்.
திமுக கூட்டணியில் 2021 தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 2 இடங்களில் சிபிஎம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
