தமிழகம் புதுவையில் விசிகவுக்கு எத்தனை இடங்கள்? திமுகவுடன் பேசியது என்ன? ’ஆட்சியில் பங்கு’ கோரிக்கையா? திருமாவளவன் பேட்டி முழுமையாக!

Published On:

| By Mathi

VCK DMK Thirumavalavan

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. திமுக கூட்டணியில் விசிகவுக்கான தொகுதிகள் குறித்து இன்று மார்ச் 2-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறியதாவது: அண்ணன் டி.ஆர். பாலு அவர்களின் தலைமையிலான திமுக குழுவினரோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நானும், கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தையில் பங்குபெற்றோம்.

ADVERTISEMENT

சராசரி தேர்தல் அல்ல..

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் வழக்கமான சராசரியான ஒரு பொதுத் தேர்தல் அல்ல. இந்தத் தேர்தலில் வலதுசாரி சக்திகளை காலூன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை 100 விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அக்கறையோடு, இந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஓர் அங்கம் என்கிற அந்த உரிமை உணர்வோடு எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம்.

ADVERTISEMENT

பேரம் பேசுகிற கட்சி அல்ல..

நாங்கள் திமுகவோடு ஒரு பேரம் பேசுகிற கட்சியாக இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும், அது தமிழ்நாட்டிற்கான வெற்றி, தமிழக மக்களுக்கான வெற்றி, சமூக நீதி அரசியலுக்கான வெற்றி என்கிற அந்தப் புரிதலோடு எங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து எங்கள் கருத்துக்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டோம்.

ADVERTISEMENT

சுமூகமான பேச்சுவார்த்தை

திமுக தரப்பில் எங்கள் கருத்துக்களைக் கேட்டுக் கொண்டார்கள். ஸ்டாலினுடன் இது குறித்து விவாதித்த பின்னர் உங்களுக்கு மீண்டும் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை சுமூகமான முறையில், சிறப்பான முறையில் நடந்தேறியிருக்கிறது.

தொகுதிகள் குறித்து பேசவில்லை..

பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து எதுவும் நாங்கள் பேசவில்லை. எங்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது எங்கள் வலிமைக்கேற்ப அமைய வேண்டும், எங்கள் பங்களிப்பிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பது குறித்தும் திமுக குழுவிற்கு நாங்கள் தெரியப்படுத்தியிருக்கிறோம். அந்த எண்ணிக்கை உறுதியான பிறகு உங்களுக்குத் தெரிவிப்போம்.

புதுச்சேரியில் எத்தனை தொகுதிகள்?

பாண்டிச்சேரியிலும் எங்களுக்கு இடம் வேண்டும் என்று கோரியிருக்கிறோம். ஒரு பொதுத் தொகுதியும் வேண்டும், தனித் தொகுதிகளும் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம் பாண்டிச்சேரியிலும். ஒரு பொதுத் தொகுதி உட்பட இரண்டு தனித் தொகுதிகள், மூன்று தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.

முதலில் எண்ணிக்கை முடிவான பிறகுதான் எந்தெந்த தொகுதி, எந்தெந்த பகுதி என்பதை நாங்கள் முடிவு செய்வோம். இப்போதைக்கு எங்கள் எண்ணம் என்ன, எங்கள் விருப்பம் என்ன என்பதை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம். அதனை ஸ்டாலினுடன் நாங்கள் பகிர்ந்து கொண்ட பின்னர் உங்களுக்கு மீண்டும் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.

இது எல்லாமே கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே உள்ள அரசியல் ரகசியங்கள், இதை வந்து நம்ம வெளிப்படையாகப் பேச முடியாது. அது எங்களுக்குள்ள நெகோஷியேஷன் (Negotiation). அந்த நெகோஷியேஷன்ல வந்து என்ன பைனல் (Final) ஆகுதோ, அந்த பைனலை உங்களுக்குச் சொல்லுவோம்.

மோடி வித்தை எடுபடாது

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மோடி வித்தை எடுபடாது. எத்தனை முறை வந்தாலும், என்னென்ன பேசினாலும், திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தைப் பூச முயற்சி செய்தாலும் தமிழ்நாட்டு அரசியலில் அது எடுபடாது. தமிழ்நாடு வேறு, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் வேறு. 2026 தேர்தல் மீண்டும் பாஜகவினருக்கு தமிழ்நாட்டு மக்கள் அதை உணர்த்துவார்கள்.

எங்களுக்கான பங்களிப்பு, எங்களுக்கான பகிர்வு என்ன என்பது குறித்தும் நாங்கள் எங்கள் கருத்தை உறுதிப்படத் தெரிவித்திருக்கிறோம். அதே வேளையில் நீங்கள் சொன்னதைப் போல கடந்த தேர்தலில் நாங்கள் இந்தக் கூட்டணியின் வெற்றி எவ்வளவு முக்கியம் என்று கூறினோமோ அதே உணர்வோடு இன்றைக்கும் நாங்கள் அதில் உறுதியாக இருப்பதற்குக் காரணம் தமிழ்நாட்டு அரசியல் சூழல் அதே சூழலாகத்தான் இருக்கிறது.

மதவாத, சாதியவாத அரசியலுக்கு இடம் இல்லை

இங்கே மதவாத அரசியலுக்கு இடமில்லை, சாதியவாத அரசியலுக்கு இடமில்லை. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் வெறுப்பு அரசியலைப் பரப்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. எனவே திமுகவிற்கு என்ன பங்கு இருக்கிறதோ அதே பங்கு அந்தந்த கட்சியின் வலிமைக்கு ஏற்ப உள்ளது.

எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழ்நாட்டின் இந்தச் சுமூகமான அரசியல் சூழலை மதவாத சக்திகளால் பாதிக்கச் செய்வதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்கிற பொறுப்புணர்வு இருக்கிறது. அந்தப் பொறுப்புணர்வோடு எங்கள் அதிகாரப் பகிர்வையும் உரிமையோடு எடுத்துரைத்திருக்கிறோம். முதல்வரிடமிருந்து எங்களுக்கு மீண்டும் அழைப்பு வரும்போது உங்களுக்குத் தெரிவிப்போம்.

அதிகாரப் பகிர்வு- ஆட்சியில் பங்கு விளக்கம்

தொகுதிப் பகிர்வுங்கறதும் ஒரு அதிகாரப் பகிர்வுதான். அதாவது கேபினட்டில் (Cabinet) பவர் ஷேர் (Power share) இல்ல. அந்த நிலைப்பாட்டை நாங்கள் தொடக்கத்திலிருந்தே ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்கிற முழக்கத்தையே முன்வைத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். 2001-க்கு முன்னாடியே மூப்பனார் அவர்களோடு நாங்கள் களத்திலே இறங்கியபோது, ‘அதிகாரம் இல்லாத ஒரு சமூகமாக ஒடுக்கப்பட்ட சமூகம் இருக்கிறது, அந்தச் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வைக் கோருகிறோம்’ என்ற கருத்தை முன்வைத்தோம். அந்த நிலைப்பாட்டில் இன்றைக்கும் உறுதியாக இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் சூழல் அதற்கேற்ப இன்னும் கனியவில்லை. ஆகவே இன்றைக்கு நாங்கள் அந்தக் கோரிக்கையை வைக்கவில்லை. எங்களுக்கான தொகுதி எண்ணிக்கையைத்தான் அதிகாரப் பகிர்வு என்கிற பெயரில் சொல்லுகிறோம். இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share