தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கூட்டணிக்குள் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (மார்ச் 2) செய்தி நிறுவனத்திற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு, “ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைக் கோருவது இயல்பான ஒன்றுதான். இறுதியில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். தற்போதும் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைக் கோரியுள்ளது. இதில் குழப்பமோ, தடைகளோ எதுவுமில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை கனிவுடன் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி என்பது வெறும் தேர்தல் உடன்பாடு மட்டுமல்ல; இது ஒரு சித்தாந்த ரீதியான மற்றும் இயற்கையான கூட்டணி (Natural & Ideological Alliance). எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. பேச்சுவார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சியாகவும், சுமூகமாகவும் நடைபெற்று வருகின்றன” என்றார்.
தமிழக எம்.எல்.ஏ.க்களிடம் காங்கிரஸின் டெல்லி தலைமை ஆலோசனை நடத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழகத்தின் கள நிலவரம் மற்றும் மக்கள் மனநிலை குறித்து டெல்லி தலைமை கேட்டறிவது ஒரு வழக்கமான நடைமுறைதான். இதில் விசேஷமாக ஒன்றுமில்லை” என்றார்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் செய்திகள் குறித்து பேசுகையில், “நாங்கள் த.வெ.க.வுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மாநிலத் தலைவர் என்ற முறையில் எனக்கோ அல்லது அகில இந்திய தலைமைக்கோ அத்தகைய எண்ணம் இல்லை. 140 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு ‘புறவாசல் அரசியல்’ (Backdoor Politics) செய்யத் தெரியாது. நாங்கள் எதையும் நேருக்கு நேராகவே அணுகுவோம்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியில் உறுதியாக உள்ளது என்றும், வதந்திகள் அடிப்படையற்றவை என்றும் தெரிவித்தார்.
