ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் விசிக

Published On:

| By Pandeeswari Gurusamy

குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் அளிக்கவுள்ள வழக்கமான ‘தேநீர் விருந்தில்’ இந்த ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அக்கட்சி தலைவர் தொல்திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் அவையிலிருந்து வெளியேறியிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறைதான். இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. அவர் இப்பொறுப்பிலிருக்கும்வரை இத்தகைய அடாவடிகளைத் தொடரவே செய்வார். அதற்கு ஏதேனும் சாக்குபோக்குகளையும் சொல்வார்.

ADVERTISEMENT

ஆளுநர் உரையில் என்ன இடம்பெற வேண்டுமென்பதை ஆளும் பீடத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள்தாம் முடிவு செயவர் என்பது காலம் காலமாக நடைமுறையிலிருந்து வரும் மரபாகும். ஆனால், இவர் தாம் விரும்புவதுபோல ‘ஆளுநர் உரை’ அமையவேண்டுமென எதிர்பார்க்கிறார். இது அவரது திட்டமிட்ட ‘அவை மரபு’ மீறலாகும். தொடர்ந்து சட்டப் பேரவையை அவமதிக்கும் அவரது இப்போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.

‘தமிழ்த்தாய் வாழ்த்து’ என்பது அவை நடவடிக்கைகளின் தொடக்கத்திலும் ‘தேசிய கீதம்’ என்பது அவை நிறைவிலும் தான் இசைக்கப்படும் என்பது அவருக்குத் தெரிந்த ஒன்று தான். எனினும், தொடக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்கவாதம். இது திமுக அரசுக்கு எதிரான -திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட அவதூறு ஆகும்.

ADVERTISEMENT

சனாதன சக்திகளிடம் வலுப்பெற்றுள்ள ‘திராவிடக் கருத்தியலுக்கு’ எதிரான ‘ஒவ்வாமையின்’ வெளிப்பாடு தான் ஆளுநரின் இத்தகைய செயல் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.

இந்நிலையில், குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளிக்கவுள்ள வழக்கமான ‘தேநீர் விருந்தில்’ விசிக இந்த ஆண்டும் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share