ஆளுநர் அரசியல்வாதி அல்ல.. சட்டசபையில் ஆளுநர் மைக் ஆஃப் செய்யப்பட்டது குறித்து சபாநாயகர் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

அரசின் குறைகளைப் பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல. ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.

ADVERTISEMENT

இந்நிலையில் சட்டசபையில் பேசத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குற்றம் சாட்டி, தனது உரையைப் புறக்கணித்து நான்காவது ஆண்டாக இன்று சட்டமன்றதில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு “நாளை மறுநாள் (ஜனவரி 21) மறைந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். வரும் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சட்டசபை கூட்டத் தொடர் முழுமையாக நடைபெறும். 24ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளிப்பார்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும் ஆளுநர் வெளியேறியது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் “அரசின் குறைகளைப் பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல. ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம். ஆளுநர் அவருக்கு உரிய பணியைச் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை இப்படிச் செய்வார்களா?

தமிழக சபை வரலாற்றில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவாக தேசிய கீதம் பாடப்படும். இந்த மரபு ஒருபோதும் மாற்றப்படாது. சபாநாயகர் பேசும்போது பேரவையில் மற்றவர்கள் மைக்கை அணைப்பது வழக்கம்தான். ‘தயவுசெய்து உங்கள் கடமையைச் செய்யுங்கள்’ என்று மட்டும்தான் ஆளுநரிடம் கூறினேன்.

ADVERTISEMENT

பொதுவாக ஆளுநர் பேசும்போது அனைவரது மைக்கும் ஆஃப் செய்யப்படும். நான் பேசும்போது ஆளுநர் உள்ளிட்டோர் மைக் ஆஃப் செய்யப்படும். நான் பேசும்போது மற்றவர்களுக்கு தெளிவாகக் கேட்கத்தான் மைக் ஆஃப் செய்யப்பட்டது. இது மரபு; எந்த மரபையும் மீறவில்லை. அரசு தயாரித்து அளித்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை. ஜனநாயகக் கடமையைப் பின்பற்றி ஆளுநருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். யாருக்கும் பயந்து தமிழ்நாடு சட்டசபையின் மரபு மாற்றப்படாது.” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share