கொரிய படங்களின் ‘காப்பியா’?
வசந்த் ரவி நடிக்க வந்து கிட்டத்தட்ட எட்டாண்டுகள் ஆகின்றன. கொஞ்சம் வசதியான பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், மருத்துவர் என்ற பணியில் இருந்து விலகி நடிப்பு நோக்கி அவரைத் தள்ளுகிற வேட்கை எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை அவர் நடிக்கிற படங்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன. ‘தரமணி’யில் தொடங்கி ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’, ‘வெப்பன்’ என்று அவர் தேர்ந்தெடுக்கிற கதையில் வழக்கத்திற்கு மாறானதாக இருந்திருக்கின்றன. ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்தின் மகனாக அவர் நடித்ததையும் அந்த வரிசையில் சேர்க்கலாம். அதனாலேயே, அவர் நடித்துள்ள ‘இந்திரா’ மீது எதிர்பார்ப்பு பெருகியது.
சபரீஷ் நந்தா எழுதி இயக்கியிருக்கும் ‘இந்திரா’வில் மெஹ்ரீன் பிர்ஸடா, சுனில், அனிகா சுரேந்திரன், கல்யாண், ராஜ்குமார் உட்படப் பலர் நடித்துள்ளனர். அஜ்மல் தஹ்சீன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
சரி, ‘இந்திரா’ தரும் திரையனுபவம் எத்தகையது?

த்ரில்லரா, ஹாரரா?
மது போதையில் வாகனம் ஓட்டி ஒரு விபத்துக்குக் காரணமாகிறார் ஒரு இளம் போலீஸ் அதிகாரி. அதனால் ‘சஸ்பெண்ட்’ ஆகிறார்.
அதன்பிறகு, தனது காதல் மனைவியுடன் பிளாட்டில் வசிக்கிறார். மனைவியுடன் அன்யோன்யமாக வாழ்ந்தாலும், அவரது முகத்தில் கொஞ்சம் கூட மகிழ்ச்சி இல்லை. தம்பதிகள் இருவரும் எந்திரம் போன்று வாழ்கின்றனர்.
அந்த காலகட்டத்தில், அவரது பார்வை பறி போகிறது. அதற்கு, அளவுக்கு மீறி மது அருந்தியதே காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, தங்களுக்குத் தெரியாமல் தங்களை யாரோ கண்காணிப்பதாக உணர்கிறார் அந்த அதிகாரியின் மனைவி. மூன்றாவதாக யாரோ ஒரு நபர் தங்களோடு இருப்பதாக நினைக்கிறார். ஆனால், அதனைக் கணவரிடம் அவரால் சொல்ல முடிவதில்லை.
இந்த நிலையில், தான் கர்ப்பமுற்றிருப்பதை அறிகிறார் அப்பெண். அந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லி மகிழ்கிறார். அதனைக் கேட்டதும், அந்த நபரும் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடைகிறார். தங்கள் வாழ்வு அடியோடு மாறப் போவதாக இருவரும் நினைக்கின்றனர்.
ஆனால், அந்த மகிழ்ச்சி சில கணங்களே நீடிக்கிறது.
சில மணி நேரம் கழித்து, தன்னுடன் இருக்கும் மனைவியைக் காணாமல் தவிக்கிறார் அந்த ஆண். தட்டுத் தடுமாறி எழுந்து நடந்து வந்தால், ஹாலில் மனைவி பிணமாகத் தொங்குவதை உணர்கிறார். வெடித்து அழுகிறார்.
ஏற்கனவே சென்னை நகரில் மூன்று பேர் கை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அதே பாணியில் அப்பெண்ணும் கொலை செய்யப்பட்டதைச் சொல்கின்றனர் போலீசார்.
அதனைத் தொடர்ந்து, ‘யார் அந்த சைக்கோ கொலையாளி’ என்று போலீசாரின் தேடல் தீவிரமாகிறது.
‘என் மனைவியைக் கொன்றவனைக் கொல்லாமல் விட மாட்டேன்’ என்று அந்த கணவரும் தனியே தேடத் தொடங்குகிறார்.
இறுதியில் என்ன ஆனது? அந்த கொலையாளியை அவர் நேருக்கு நேர் எதிர்கொண்டாரா என்று சொல்கிறது ‘இந்திரா’வின் மீதி.
ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியைச் சுற்றியே கதை நிகழ்கிறது என்பதால் படத்தின் தொடக்கமும் முடிவுமாக அவரே இருக்கிறார்.
முன்பாதியில் ‘இது ஒரு ஹாரரா’ என்று நினைக்கும்படியாகக் கதை சொல்லல் இருக்கிறது. அதற்கேற்ப கேமிரா கோணங்கள், நகர்வுகள், காட்சி சித்தரிப்பு இருக்கின்றன.
பிறகு, ‘இது ஒரு சைக்கோ த்ரில்லர்’ எனும்படியாகக் காட்சிகள் வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, ‘இல்லை, இந்தக் கதையில் சொல்லப்படாத பக்கம் உண்டு’ என்று ஒரு ‘பிளாஷ்பேக்’ காட்டப்படுகிறது.
இந்த ‘கதை சொல்லல்’ ஆங்காங்கே திருப்பங்களைத் தந்தாலும், ஒட்டுமொத்தமாகப் படம் பார்க்கையில் ‘ஏதோ ஒன்று மிஸ் ஆகுதே’ எனத் தோன்றுகிறது. அது, அனைத்து கதாபாத்திரங்களையும் ஒன்றாகப் பிணைக்கிற தொடர்பிழை.
அது இல்லாதிருப்பது தான் இப்படத்தின் பலவீனம்.

’த்ரில்’ போதுமா?
’இந்திரா’வைப் பார்த்து முடித்தபிறகு, ’இதே மாதிரி வேற எங்கேயோ பார்த்திருக்கிறோமே’ என்ற எண்ணம் நிச்சயமாக ஏற்படும். கிளைமேக்ஸ் காட்சி ‘கொரிய திரைப்பட’ பாணியில் அமைந்திருப்பதாக உணர வைக்கும்.
குறிப்பாக, இப்படத்தில் ’பாராசைட்’ சாயல் உள்ளது என்று சொன்னால் ‘ஸ்பாய்லர்’ ஆகிவிடும்! அதனால், அந்த பேச்சை அப்படியே நிறுத்திக் கொள்வோம்.
அந்த திசையில் தொடர்ந்து சென்றால், ‘இது கொரிய படங்களின் காப்பியா’ என்ற கேள்வியில் முட்டி மோத வேண்டியிருக்கும். இயக்குனர் சபரீஷ் நந்தா மட்டுமே அதற்குப் பதிலளிக்க முடியும்.
’இந்திரா’வை நாம் ஏன் பார்க்க வேண்டும்? இந்த கேள்விக்கான பதிலாக இருப்பது அதன் காட்சியாக்கம். அது எளிதாக நம்மை வசீகரிப்பதாக உள்ளது.
அந்த வகையில், இயக்குனர் காட்ட விரும்பிய உலகிற்கு, அவரது சிந்தனைக்கு உருவம் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்.
அவர் அழகியலோடு ஷாட்களை வடிக்க, திகிலூட்டும் கேமிரா கோணங்களை முயற்சிக்கிற வகையில் முனி பால்ராஜின் கலை வடிவமைப்பு அமைந்திருக்கிறது.
அந்த ஷாட்கள், காட்சிகளைக் கொண்டு திரையில் கதை சீராக விரிய முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்.
இது போகப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர், இசையமைப்பாளர் அஜ்மல் தஹ்சீன். அவரது பின்னணி இசை காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறது. நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கிறது.
அதேநேரத்தில், அவர் தந்துள்ள பாடல்கள் காட்சியமைப்புக்கு உதவினாலும் திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்றதாக இல்லை; சட்டென்று மிகப்பெரிய ஈர்ப்பை உருவாக்கும் வகையிலும் இல்லை.
படம் முழுக்க நாயகன் வசந்த் ரவி வியாபித்திருக்கிறார்.
சில காரணங்களால் பார்வை பறி போன ஒருவர் எப்படி செயல்படுவாரோ, அதனைத் திரையில் உணர்த்த முயன்றிருக்கிறார். சில இடங்களில் இதுவரை நாம் திரைப்படங்களில் பார்த்த ’பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி’களிடம் இருந்து அவர் விலகித் தெரியலாம். ஆனாலும், இப்படத்திற்கான அவரது உழைப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது.
இதில் நாயகி மெஹ்ரீன் பிர்ஸடாவுக்கு இணையாக அனிகா சுரேந்திரன் வந்து போகிறார். அவர் வருகிற இடங்கள் குறைவென்றபோதும் சட்டென்று ஈர்க்கின்றன.
மெஹ்ரீன் அப்படியொரு ஈர்ப்பைத் தராமல் போனதற்கு என்ன காரணம் என்று இயக்குனரைப் போலவே நாமும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
இந்தப் படத்தில் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார், டான்ஸ் மாஸ்டர் கல்யாண், கஜராஜ் உட்படச் சிலர் வந்து போகின்றனர்.
அவர்களில் அனிகாவின் காதலராக நடித்துள்ள சுமேஷ் மூர் ஈர்க்கிறார். அவரோடு போட்டியிடுகிற வகையில் தெலுங்கு நடிகர் சுனிலும் நம்மை வசீகரிக்கிறார்.
இவ்விரண்டு பாத்திரங்களையும் நாயகனுக்கு இணையாகப் படைத்திருந்தால், ‘இந்திரா’வின் திரைக்கதையே வேறுவிதமாக மாறியிருக்கும். இப்படம் தருகிற திரையனுபவமும் ‘கிளாசிக்’ வரிசையில் சேர்ந்திருக்கும்.
அது ‘மிஸ்’ ஆனதில் இயக்குனர் சபரீஷ் நந்தா, படக்குழுவைக் காட்டிலும் ரசிகர்களான நமக்குத்தான் வருத்தம் அதிகம்..!