’வாட்டர்கேன்’ பின்னணியில் ‘கேங்வார்’!
கவிதை, ஓவியம், சிற்பம், கதை, நடனம், நாடகம் என்று எந்தவொரு படைப்பையும் உருவாக்கும் தருணத்தில் ‘ஆத்மார்த்தமான நேசிப்பை’ வெளிப்படுத்தினால், அதன் உள்ளடக்கம் பார்வையாளர்களை ஈர்க்கும்படியாக அமையும். திரைப்பட உருவாக்கத்திற்கும் அது பொருந்தும். அப்படியொரு ‘நேசிப்பை’ ஒரு படக்குழுவினர் வெளிப்படுத்தும்போது, அதன் ஒவ்வொரு பிரேமும் ‘செறிவானதாக’த் தெரியும். அப்படியொரு ‘ஆத்மார்த்தமான நேசிப்பை’க் காணத் தருகிறது ‘வருணன்’ திரைப்படம். varunam movie review march 14
ஜெயவேல்முருகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு போபோ சஷி இசையமைத்திருக்கிறார்.
துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியலா சார்ல்டன், ஹரிப்ரியா இசை, பிரியதர்ஷன், ராதாரவி, சரண்ராஜ், மகேஸ்வரி சாணக்யன், ஜீவா ரவி, சங்கர்நாக் விஜயன், டும்கான் மாரி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது ‘வருணன்’?

‘வாட்டர்கேன்’ பின்னணியில் கதை! varunam movie review march 14
சென்னை ராயபுரத்திலுள்ள பனைமரத்தொட்டி பகுதியில் ‘வாட்டர் கேன்’ வியாபாரத்தில் இரண்டு பேர் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
ஒருவர் அய்யாவு (ராதாரவி). மதுரையில் இருந்து சென்னைக்கு வியாபாரம் செய்ய வந்து அதில் வெற்றியைச் சுவைத்து வருபவர்.
இன்னொருவர், ராயபுரத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஜான் (சரண்ராஜ்). செய்யும் வேலையைக் கவனமாகச் செய்தாலே போதுமென்று இருப்பவர்.
ஜான் மனைவி ராணி (மகேஸ்வரி). அவரது சகோதரர் டப்பா (சங்கர்நாக் விஜயன்) தான் ‘வாட்டர்கேன்’ வியாபாரத்தைக் கவனித்து வருகிறார். கூடவே, சட்டவிரோதமாக ‘சுண்டகஞ்சி’ தயாரிப்பிலும் ஈடுபடுகிறார்.
ஜானும் அய்யாவும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சுமூகமாகப் போகும் வகையில் வாழ்ந்தாலும், அவர்களின் கீழ் வேலை செய்கிறவர்கள் அவ்வாறு எண்ணுவதில்லை. இதனால், அடிக்கடி இரு தரப்புக்கும் மோதல் ஏற்படுகிறது.
அந்த வகையில், திருநெல்வேலியைப் பூர்விகமாகக் கொண்ட தில்லைக்கும் (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்) டப்பாவோடு சேர்ந்து சுற்றும் ஹைடுவுக்கும் (ஹைடு கார்த்தி) இடையே மோதல் ஏற்படுகிறது.
போலவே, தான் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மருதுவோடு (பிரியதர்ஷன்) தில்லைக்கு அடிக்கடி சண்டை நிகழ்கிறது.
ஒருகட்டத்தில் தில்லை அப்பகுதியில் வசிக்கும் சிட்டு (கேப்ரியேலா) மீது காதல் கொள்கிறார்.
அக்னி (ஹரிப்ரியா) என்ற பெண் மீது காதல்வயப்படுகிறார் மருது.
காதலில் குழைவு, நட்பில் துடிப்பு, மோதலில் ஆக்ரோஷம் என்றே தில்லையும் மருதுவும் இருக்கின்றனர். திடீரென்று ஒருநாள் இருவருக்குள்ளும் நட்பு துளிர்க்கிறது.
இன்னொரு பக்கம் டப்பா உடன் மருது, தில்லை இருவரும் மோதல் போக்கைத் தொடர்கின்றனர். அது அவர்களது வாழ்வில் சில அசம்பாவிதங்களை உண்டாக்குகிறது.
இதற்கிடையே ‘சுண்டகஞ்சி’ தயாரிக்கும் விவகாரத்தில் ஜான் ஆட்களைக் கைது செய்வதில் குறியாக இருக்கிறார் போலீஸ் அதிகாரி மதுரை வீரன் (ஜீவா ரவி). தெரிந்தோ தெரியாமலோ தில்லையும் மருதுவும் அதற்கு உதவி செய்வதாற்போல ஒரு சம்பவம் நிகழ்கிறது.
அதன் தொடர்ச்சியாக அய்யாவு, ஜான் இடையிலான சமரசப்போக்கும் சிதைகிறது.
பிறகு என்னவானது என்று சொல்கிறது ‘வருணன்’ படத்தின் மீதி. ‘வாட்டர் கேன்’ வியாபாரப் பின்னணியில் ஒரு ‘கேங் வார்’ என்பதுதான் இதன் சாராம்சம்.
ரொம்பச் சாதாரணமான கதை என்றபோதும், ‘தண்ணீர் கேன்’ வியாபாரத்தை மையமாக வைத்துச் சில பாத்திரங்களைத் திரையில் உலவவிட்டிருப்பது புதியதொரு அனுபவத்தைத் தருகிறது.
‘வருணன்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன என்பதுவே இப்படத்தின் யுஎஸ்பி. அதன் பின்னணியில் இருக்கும் படக்குழுவினரின் ‘ஆத்மார்த்தமான நேசிப்பு’ திரையில் தெரிகிறது.

ரசனைமிகு உருவாக்கம்!
ராதாரவி, சரண்ராஜ் போன்ற சீனியர் நடிகர்கள் இதில் நடித்திருக்கின்றனர். வெகு இயல்பாக அவர்கள் திரையில் தெரிவது பெரிய விஷயமல்ல. அந்த அளவுக்குப் பல திரைப்படங்களில் அவர்கள் நம் பாராட்டுகளை அள்ளியிருக்கின்றனர். இதிலும் அப்படியே.
இதில் நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ஒரு சாதாரண இளைஞராகத் திரையில் தெரிகிறார். அதேநேரத்தில் அளவாக ஆக்ரோஷத்தையும் காதலையும் பாசத்தையும் இதர உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார்.
துஷ்யந்த் ஜோடியாக இதில் கேப்ரியேலா வருகிறார். பதின்ம வயதுப் பெண்ணுக்கே உரிய ’க்யூட்னெஸ்’ உடன் திரையில் தோன்றியிருக்கிறார்.
இதில் இன்னொரு ஜோடியாக பிரியதர்ஷன் – ஹரிப்ரியா இசை வந்து போயிருக்கின்றனர். சிரிப்பையும் கோபத்தையும் காதலையும் வெளிப்படுத்தும் காட்சிகள் இருவருக்கும் வாய்த்திருக்கின்றன.
ஆரம்ப காட்சியில் நடிகர் ஜெய்யை ‘இமிடேட்’ செய்தாற் போல தோன்றியிருப்பதால், அடுத்து பிரியதர்ஷன் செய்கைகள் அனைத்தும் அவரைப் போன்றே தோற்றம் தருகின்றன.
‘எதிர்நீச்சல்’ சீரியலில் கலக்கும் முன்பே ஹரிப்ரியா நடித்த படமிது. அளவாக, ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி நடித்திருக்கிறார்.
இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலிருக்கும் என்ற எண்ணத்தை கேப்ரியேலா, ஹரிப்ரியாவின் சமீபத்திய உருவ மாற்றம் நமக்குணர்த்துகிறது.
மகேஸ்வரி இதில் வில்லத்தனம் காட்டுபவராக வருகிறார். அவருக்கான சில காட்சிகள் ‘வெட்டப்பட்டிருப்பது’ வெளிப்படையாகத் தெரிகிறது.
வில்லனாக சங்கர் நாக் விஜயன் தோன்றியிருக்கிறார். வாயை ஒருவிதமாக வலிக்கும் மேனரிசத்துடன் சட்டென்று கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரது கையாளாக வரும் ஹைடு கார்த்தி மிரட்டலாகத் தோன்றுவதோடு நடிக்கவும் செய்திருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து ‘சுப்பிரமணியபுரம்’ மாரி, கோகுல் உட்படச் சிலர் இதில் நடித்துள்ளனர்.
‘வருணன்’ படத்தைப் பொறுத்தவரை முதன்மை பெறுவது ஸ்ரீராமசந்தோஷின் ஒளிப்பதிவு.
பெரும்பாலும் வடசென்னையை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் டிஐ எபெக்ட் உடன் குறிப்பிட்ட வண்ணங்களையே திரையில் பிரதிபலிக்கும். இப்படத்திலோ அனைத்து வண்ணங்களையும் தெளித்திருக்கிறார். அதேநேரத்தில், அவை காட்சியின் தன்மைக்கோ, கதையின் நீட்சிக்கோ ‘பங்கம்’ விளைவிக்கவில்லை.
கூடவே, ‘லைவ்’வாக பார்க்கிற ஒரு உணர்வை உண்டாக்கியிருக்கிறது அவரது ‘கேண்டிட்’ உத்தியில் அமைந்த ஷாட்கள்.

போபோ சஷியின் இசையில் பாடல்கள் அனைத்தும் முதன்முறையாகக் கேட்கும்போதே மனதைத் தொடுகின்றன. அதனால், இருக்கையை விட்டு எழவோ, நெளியவோ வேண்டிய அவசியமில்லை.
பின்னணி இசையமைப்பில் காட்சிக்குத் தக்க உணர்வுகளைப் பிரதிபலித்திருப்பது அருமை.
படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் முத்தையன், கடைசியாக வரும் இருபது நிமிடக் காட்சிகள் அதுவரையிலான கதை சொல்லலில் இருந்து விலகி நிற்பதைக் கவனிக்காமல் விட்டிருக்கிறார். பட்ஜெட் குறைபாடும் கூட அதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.
இப்படத்தின் தொடக்கத்தில், நடுவில், முடிவில் சத்யராஜின் குரலில் ’நீரின்றி அமையாது உலகு’ எனும் சொற்களோடு ‘தண்ணீர் அரசியல்’ குறித்த ‘வாய்ஸ் ஓவர்’ இடம்பெற்றிருக்கிறது. அது நமக்கு வேறொரு கதையை உருவகப்படுத்த உதவுகிறது.
அதற்கும் இப்படத்தின் கதைக்கும் பெரிய சம்பந்தமில்லை, ‘வாட்டர் கேன்’ வியாபாரத்தைத் தவிர. அந்த வாய்ஸ் ஓவரை உள்வாங்குபவர்களுக்கு இப்படம் தரும் அனுபவம் ஏமாற்றமாகத்தான் தெரியும்.
அதனைத் தவிர்த்துவிட்டு, இரு தரப்பைச் சேர்ந்த இளவட்டங்களின் மோதலாக மட்டுமே இப்படத்தை முன்னிறுத்தியிருக்கலாம். அதுவும் இப்படத்தின் பலவீனங்களில் ஒன்றாக உள்ளது.
கலை வடிவமைப்பில் பத்து, ஸ்டண்ட் கொரியோகிராஃபியில் தினேஷ் சுப்பராயன், ஆடை வடிவமைப்பில் செல்வா, ஒலி வடிவமைப்பில் தபஸ் நாயக் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இப்படத்தைச் செறிவுமிக்கதாக உணரச் செய்கிறது.
ரமண கோபிநாத்தின் வசனங்கள் எளிமையாக இருக்கின்றன. அதேநேரத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்த மனிதர்கள் இதில் பாத்திரங்களாக இருக்கும் நிலையில், அவர்களது பேச்சில் தெரிகிற வித்தியாசத்தை இன்னும் கொஞ்சம் விரிவாகக் காட்டியிருந்தால் நன்றாக இருக்கும்.
‘சென்னை 600028’ போன்ற சிறு பட்ஜெட் படங்களைப் பார்த்து இயக்குனர் ஜெயவேல் முருகன் ஊக்கம் பெற்றாரா என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியையும் கவனத்துடன் இழைத்திருக்கிறார். அது நிச்சயம் பாராட்டுக்குரியது.
கிளைமேக்ஸ் பகுதியில் சொதப்பியிருப்பது, அதுவரையிலான அவரது திரைக்கதையாக்க உழைப்பைக் கவனிக்கவிடாமல் செய்கிறது. அதனை அவர் தவிர்த்திருக்கலாம்.
ஏற்கனவே சொன்னது போல, சத்யராஜின் ‘வாய்ஸ் ஓவர்’ இப்படத்தின் திரைக்கதையோடு பொருந்தாமல் ஆறாம் விரலாக உள்ளது. ஜனநாதனின் ‘ஈ’ படத்திற்கு நிகரான எதிர்பார்ப்பை அது உருவாக்குகிறது என்பதால், அதனைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
’வருணன்’ படம் ‘ஆஹா.. ஓஹோ..’ என்று புகழக்கூடிய அளவில் இல்லை தான். அதேநேரத்தில், ரசனைமிகு உருவாக்கத்தை இதில் காண முடிகிறது. ‘ஆத்மார்த்தமான நேசிப்பை’ இயக்குனருடன் இணைந்து மொத்த படக்குழுவும் வெளிப்படுத்தியிருப்பதை உணர முடிகிறது. அது மட்டுமே ‘வருணன்’ படத்தில் இருக்கும் குறைகளைப் புறந்தள்ள வைக்கிறது.
முழுமையாகத் தயாராகிச் சில ஆண்டுகள் ஆனபிறகும் நல்லதொரு திரையனுபவத்தை நாம் பெறுவதற்கும் அந்த ரசனைமிகு உருவாக்கமே காரணம். இரண்டாண்டுகளுக்கு முன் வெளியான ‘டைனோசர்’ திரைப்படம் இப்படியொரு திருப்தியை எனக்குத் தந்தது.
‘வருணன்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கட்டும் என்று சொல்லும் அளவுக்கு அது அமைந்திருக்கிறது..!