சென்னை கம்பன் விழாவில் “ராமன் புத்தி சுவாதீனம் இல்லாதவன்” என கவிஞர் வைரமுத்து பேசியதற்கு ஆன்மீகப் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 8-ந் தேதி மாலை நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் `கம்பன் கலைக்களஞ்சியம்’ என்ற பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டார். இந்த மலரை சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் ஜெகத்ரட்சகன் எம்.பியின், “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, “சீதையப் பிரிந்த ராமன், செய்வதறியாமல் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான்; புத்தி சுவாதீனம் இழந்தவன் செய்கிற குற்றம்- குற்றமாகாது என்கிறது இந்திய தண்டனைச் சட்டம். ராமன் என்ற ஒரு குற்றவாளி, முற்றிலும் விடுவிக்கப்படுகிறான்” என பேசியிருந்தார் வைரமுத்து.
இது மிகப் பெரும் சர்ச்சையானது. தமிழக பாஜகவினர் வைரமுத்துவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட வைரமுத்து,
கம்பன் கழகத்தின்
பொன்விழாவில்
ஆழ்வார்கள்
ஆய்வுமையம் நிறுவிய
கவிச்சக்கரவர்த்தி
கம்பர் விருதை
மாண்புமிகு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்கள்
எனக்கு வழங்கினார்
“மறைந்து நின்று
அம்பெய்து கொன்ற ராமனை
வால்மீகி மன்னிக்கவில்லை;
அம்பு வீசப்பட்ட வாலியும்
மன்னிக்கவில்லை;
அந்தப் பழியை உலகமும்
மன்னிக்கத் தயாராக இல்லை
ஆனால் கம்பன்
ராமனைப் பழியிலிருந்து
காப்பாற்றுகிறான்
“தேவியைப் பிரிந்த பின்னர்
திகைத்தனை போலும் செய்கை”
என்ற வரியில்
மனைவியைப் பிரிந்த ராமன்
மதிகெட்டுப் போனான் என்று
கம்பன் இரக்கமுறுகிறான்
மதிமயக்கத்தால்
மனப்பிறழ்ச்சியால்
ஒருவன் செய்யும் செயல்
குற்றத்தில் சேராது என்பது
இந்தியத் தண்டனைச்
சட்டத்தின் 84ஆம் பிரிவு
அந்த வகையில்
மதி மாறுபாட்டால்
ராமன் வாலியை
மறைந்து நின்று அம்பெய்து கொன்றது
குற்றன்று என்று கம்பன்
ராமனை மீட்டெடுக்கிறான்
கம்பனால்
மன்னிக்கப்பட்ட ராமன்
மனிதனாகிறான்;
கம்பன் கடவுளாகிறான்”
என்று பேசினேன்
சரியென்று
தலையசைத்தார்கள்
சான்றோர்கள்
கம்பன் கழகத் தலைவர்
டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்
உடனிருக்கிறார்
என விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் அதே கம்பன் விழாவில் இன்று ஆகஸ்ட் 10-ந் தேதி பேசிய ஆன்மீகப் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ், வைரமுத்துவின் கருத்தை கடுமையாக மறுத்து பேசினார்.
இலங்கை ஜெயராஜ் பேசியதாவது: ராவணனை நல்லவன் என்று சொல்கிற ஒரு அமைப்பை இந்த சமுதாயத்தில் உருவாக்கக் கூடாது என எல்லோரிடமும் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். இதை சொல்வதற்கு காரணம் இருக்கிறது.
ராமனிடத்தில் பிழைகளைக் காட்டுவாயா என்றால் காட்டலாம். இவ்வளவு கெட்டதுகள் எங்களுக்குள் இருக்கும் போது ஒருவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்? ஆகவே, அவனிடத்திலும் ஒரு குற்றத்தைக் காட்டுவேன் என நினைக்கிற மன இயல்பு இருக்கிறதே அது நம்முடைய தாழ்ச்சியின் அடையாளம். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.
ராமன் குற்றம் செய்தானா? என்றால், ராமன் குற்றம் செய்தது போல கம்பன் காட்டினானே தவிர ராமன் குற்றம் செய்யவில்லை.
குருவார்த்தை மீறினான், பெண்ணை கொலை செய்தான், அதன் பின்னர் வாலியை கொலை செய்தான், சூர்ப்பநகையோடு விளையாடினான், சீதையை தீக்குளிக்க வைத்தான் என்று சொல்கிற அனைத்தையும் குற்றமாக சொல்ல முடியாது.
ஒரு விழா எடுத்து ஒரு சபை அமைத்து ஒரு பேச்சாளனை பேச வைத்தது, உயர்ந்து நின்ற ஒரு பாத்திரத்தை தாழ்த்தி பேசுவதற்காகத்தானா? அதற்காகவா இத்தனையையும் நாம் செய்கிறோம்? எனக்கு புரியவில்லை.
கம்பன் என்ற பெரும்புலவன் உயர்த்தி வைத்த ஒரு பாத்திரத்தை நம்முடைய அறிவு நுட்பம் கொண்டு, வியாக்கியானம் கொண்டு கீழே தாழ்த்துவதுதான் நம்முடைய நோக்கமா? என்று கேட்டால் அப்படியானால் அதற்கு ஒரு விழா எடுக்க வேண்டிய தேவை என்ன என்றுபடுகிறது.
முதல் நாள் விழாவில், நான் ரொம்பவும் ரசிக்கிற கவிஞர் வைரமுத்து, அவர் பெரிய மகா கவிஞர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் அன்றைக்கு என்னை ரொம்ப பாராட்டிப் பேசினார்.
ஆனால், வாலி வதை பற்றி சொல்கிற போது வைரமுத்து ஒரு செய்தி சொன்னது என்னுடைய மனதிலே ரொம்ப தைத்தது.
வாலி வதை வழக்கில் இருந்து ராமனை நான் காப்பாற்றுகிறேன் என நினைத்துக் கொண்டு வைரமுத்து சொன்னது, ‘அவன் குற்றவாளி இல்லை; ஏனென்றால் அவனுக்கு புத்தி சுவாதீனம் இல்லை’ என்றார். ராமனை ‘பைத்தியக்காரனாக்கிவிட்டால்’ இந்த குற்றத்திலே இருந்து தப்பித்துவிடலாம்; அதற்காக இந்த திகைத்தல்- தேத்தனன் என்ற வார்த்தைக்கு அகராதியில் தேடி, ஒரு பொருள் சொல்லி ராமன் புத்தி குறைந்தவன், ராமன் சுவாதீனமற்றவன் என்று சொன்ன அந்த வார்த்தையைக் கேட்ட போது நெஞ்சிலே கொஞ்சம் வலித்தது.
தாழ்ந்தவர்களை உயர்த்த வேண்டுமே தவிர, உயர்ந்தவர்களை நாம் தாழ்த்தக் கூடாது. அது ரொம்ப முக்கியமானது. அதற்காகத்தான் இலக்கியங்கள் பிறக்கின்றன.
என்னுடைய ஆசிரியர் சொன்னது, நமக்கும் திருக்குறள் உரையாசிரியர்களுக்கும் இருக்கிற வித்தியாசம் என்ன என்று கேட்டால், நாங்கள் புலவன் தந்த பாட்டிலே இருக்கிற சொல்லுக்கு ஊடாக போகிறோம். ஆனால் உரையாசிரியர்கள் அப்படி அல்ல.. காவியத்தைப் பாடிய அந்த புலவனின் அறிவுநிலையிலேயே நிற்கிறபடியால், பொருளுக்குள் உள்ளே இருந்து சொல்லுக்குள் இறங்குவார்கள். அதனாலே சொற்களுக்கான பொருட்களை விளங்கும் போது நூலாசிரிய ரின் எண்ணமாக இருக்கும். ஒரு புலவனின் கருத்தை விளங்காமல் நான் வியாக்கியானம் செய்கிறேன் என்பது மிகப் பெரும் தவறு.
ராமனை குற்றம்சாட்டுவது கம்பனின் நோக்கமே இல்லை. ஒரு உண்மையை காண்பதற்கு 3 பிரம்மானங்களைப் பெற்றிருக்க வேண்டும்; காட்சி- கண்டறிதல்; அனுமானித்து அறிதல்- ஆகமம் பிரம்மானம்; சிந்தித்து அறிகிற – அனுமானித்து அறிகிற அறிவுதான் பெரிது.
ராமன் மீது குற்றம் வருகிற ஒவ்வொரு காட்சியையும் நாம் எப்படி பார்க்க வேண்டும் எனில் இவன் பிழை செய்ய நியாயமில்லை என்றுதான் பார்க்க வேண்டும். இவ்வாறு இலங்கை ஜெயராஜ் பேசினார்.