“திமுக அரசுக்கு எதிராக எந்த பிரச்சனையிலும் நான் விமர்சனம் வைத்தது இல்லை. இனியும் வைக்க மாட்டேன்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூலை 2) தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். மதிமுகவில் நேற்றிலிருந்து செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக அவரிடம் தெரிவித்தேன்.
எங்களைப் பொறுத்தவரையில் திமுக அரசுக்கு எதிராக எந்தக்கட்டத்திலும் எந்த பிரச்சனையிலும் நான் விமர்சனம் வைத்தது இல்லை. இனியும் வைக்க மாட்டேன். அதேநேரத்தில் திமுகவுக்கு பக்கபலமாக இருப்போன். கலைஞரின் இறுதிக்காலத்தில் நான் இதை அவரிடம் உறுதியளித்தேன்.

என்னுடைய 61 வயது பொது வாழ்வில் 30 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றினேன். தற்போது 31 ஆண்டுகள் மதிமுகவை வழி நடத்தி வருகிறேன். இந்துத்துவ, சனாதன சக்திகள் பாஜகவின் குடை நிழலில் இருந்துகொண்டு தமிழகத்தை திராவிட இயக்கத்தை தகர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இமயமலையை கூட அசைத்து விடலாம், ஆனால் திராவிட இயக்கத்தை தமிழகத்தில் இருந்து யாராலும் அசைக்க முடியாது.
வாஜ்பாய், அத்வானி ஆகியோர் என்னை கேபினட் அமைச்சராக்குகிறோம் என்று சொன்னபோது, நான் முடியாது என்று சொன்னேன். என்னை பொறுத்தவரை கொள்கை என்றால் அதில் உறுதியாக இருப்பேன்.
திமுக தனிப்பெரும்பான்மையுடன் 2026 தேர்தலில் ஆட்சியமைக்கும். எந்த கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஓட்டு இல்லாமல், திமுக எம்.எல்.ஏ-க்களே ஓட்டு போட்டு முதல்வரை தேர்ந்தெடுக்கும் வகையில் திமுக வெற்றி பெறும்.
எங்களை பொறுத்தவரையில் கூட்டணி அரசு என்ற நோக்கம் இல்லை. அதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார். vaiko says i am not criticised dmk