மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். திருச்சியில் இருந்து மதுரைக்கு ஜனவரி 2-ந் தேதி முதல் சமத்துவ நடைபயணம் மேற்கொள்ளும் வைகோவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபயணங்கள் மூலம் அதிகமாக மக்களை சந்தித்த அரசியல் தலைவர் வைகோ. நதிநீர் இணைப்பு, முல்லை பெரியாறு உரிமை பாதுகாப்பு, மதுவிலக்கு, நியூட்ரினோ ஆய்வு மைய எதிர்ப்பு உள்ளிட்டவைகளை முன்வைத்து வைகோ, நடைபயணம் மேற்கொண்டிருந்தார்.
தற்போது மீண்டும் ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்ள இருக்கிறார் வைகோ. திருச்சியில் இருந்து ஜனவரி 2-ந் தேதி வைகோவின் சமத்துவ நடைபயணம் மதுரை நோக்கி தொடங்குகிறது.
போதைப் பொருளுக்கு எதிராவும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்காகவும் மேற்கொள்ளப்படும் வைகோவின் இந்த நடைபயணம், மணப்பாறை-திண்டுக்கல் வழியாக மதுரையை சென்றடையும்.
இதனையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைகோ இன்று (நவம்பர் 12) சந்தித்து பேசினார். அப்போது வைகோவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
