ADVERTISEMENT

மதிமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் – வைகோவை சந்திக்க நேரம் வேண்டும் – மல்லை சத்யா

Published On:

| By Kavi

மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளார் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ.

மதிமுக துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில் மதிமுகவின் அதிருப்தியாளர்களை அணிதிரட்டி, வரும் செப்டம்பர் 15ஆம் தேதியன்று பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழாவை முப்பெரும் விழாவாக காஞ்சியில் நடத்த மல்லை சத்யா திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 19) பூந்தமல்லியில் நடைபெற்றது.

அப்போது, வைகோவுக்கு திராவிட ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக மல்லை சத்யா தெரிவித்தார்.

ADVERTISEMENT

கூட்டம் நடந்துகொண்டிருந்த போதே மகாபலிபுரத்தில் உள்ள மல்லை சத்யா வீட்டுக்கு மதிமுக தலைமையில் இருந்து கடிதம் வந்துள்ளது.

இந்த கடிதத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதியே வைகோ ஸ்பீட் போஸ்ட் மூலம் மல்லை சத்யாவுக்கு அனுப்பியிருக்கிறார். அது, 19ஆம் தேதி தான் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

அதில், “14.07.2025 முதல் மல்லை சத்யா அளித்து வரும் பேட்டிகள், உரைகள் ஆகியவை தவறான நடவடிக்கைகளை வெளிப்படுத்தி வருகிறது. எனவே தங்களின் கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக மதிமுக சட்ட திட்ட விதி எண் 35ன் படி தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படுகிறது. எனவே மல்லை சத்யா தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்.

இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு, மதிமுகவில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட சி. ஏ. சத்யாவுக்கு இதன் மூலம் 15 (பதினைந்து) நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நாளிலிருந்து 15 நாட்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக்கோரி மதிமுக பொதுச் செயலாளரிடம் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்கலாம். அவ்வாறு எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கைக்கு பதிலளிக்க விருப்பமில்லை என கருதி பொதுச் செயலாளர்ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்வார்.

தற்போது ஒழுங்கு நடவடிக்​கைக்கு உட்​பட்டு கட்​சி​யின் உடமை​கள், ஏடு​கள், பொறுப்​பு​கள், கணக்​கு​கள் அனைத்​தை​யும் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளரிடம் ஒப்​படைக்க வலி​யுறுத்​தப்​படு​கிறது. அவரது கருத்​துக்​கோ, செயல்​பாட்​டுக்கோ மதி​முக பொறுப்​பேற்​காது. அவர் மதிமுக கட்சி பெயரையோ, கொடியையோ பயன்​படுத்​தக் கூடாது. மதி​முக தலைமை நிர்​வாகி​கள் குறித்து கருத்து பதிவு செய்​யக் கூடாது ” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தை வீட்டில் இருந்தவர்கள் வாட்ஸ் அப் மூலமாக மல்லை சத்யாவுக்கு அனுப்பினர்.

அதை பார்த்துவிட்டு அக்கடிதம் தொடர்பாக கூட்டத்திலேயே மல்லை சத்யா பேசியிருக்கிறார்.

“கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று வைகோ கடிதம் அனுப்பியிருக்கிறார். நான் நாளையே நேரில் விளக்கமளிக்க தயாராக இருக்கிறேன். எங்கு வர வேண்டும், இடத்தையும் நேரத்தையும் சொல்லுங்கள்… நான் மட்டும் தனியாக வருகிறேன். வேறுயாரும் என்னுடன் வரவில்லை. உங்களது அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமளிக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த தற்காலிக நீக்கம் தொடர்பாக மல்லை சத்யா இன்று (ஆகஸ்ட் 20) ஊடகங்களிடம் கூறுகையில்,“இந்த அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியாக இல்லை. கடந்த 4 வருடங்களாக இதைத்தான் எதிர்பார்த்திருந்தேன். நான் மட்டுமல்ல… வைகோ சூழ்நிலை கைதியாக மாற்றப்பட்டு மகனுக்காக இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டிருக்கிறார். என்னிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். அதேவேளையில், பொதுவெளியில் என்னை விமர்சித்த துரையிடமோ, அவரது ஆதரவாளர்களிடமோ விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறதா. நான் வைகோவுக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிப்பதாக கூறுவது அப்பட்டமான பொய். வைகோதான் நான் துரோகி என்று என்னுடைய 32 ஆண்டுகால பொது வாழ்க்கையை களங்கம்படுத்தும் வகையில் கூறினார். சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னவர் வைகோ, துரைவைகோவும் என் மீது கடுமையாக விமர்சனம் வைத்து பேசியவர். உட்கட்சி ஜனநாயம் மதிமுகவில் படுகொலை செய்யப்பட்டுள்ளது. என்னுடைய விளக்கத்தை வைகோவை நேரடியாக சந்தித்து கொடுக்க விரும்புகிறேன். இதற்கு அவர் நேரம் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக வைகோ, மல்லை சத்யாவை துரோகி என்று கூறியபோதும் கட்சியில் இருந்து நீக்காமல் இருந்தார். மல்லை சத்யாவும் வெளியேறாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share