புதுச்சேரி பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் இன்று (ஜூன் 29) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். v p ramalingam set to become puducherry
புதுச்சேரி பாஜக மாநில தலைவராக செல்வ கணபதி இருந்து வருகிறார். இந்தநிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா மேற்கொண்டு வந்தார்.
இதையடுத்து, புதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ-க்கள் வெங்கடேசன், அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் ஆகியோர் கடந்த ஜூன் 27-ஆம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்தநிலையில், வி.பி.ராமலிங்கம், சாய் சரவணகுமார் ஆகிய இருவரில் ஒருவரை மாநில தலைவராக நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாக கடந்த ஜூன் 27-ஆம் தேதி மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி, பாஜக தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது. இதில் வி.பி.ராமலிங்கம் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் வி.பி.ராமலிங்கம் போட்டியின்றி பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாளை (ஜூன் 30) புதுச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் ஜோக் வி.பி.ராமலிங்கத்திற்கு பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்.
பட்டியலின சமூகத்தை சேர்ந்த சாய் சரவணகுமார் தமக்கு பாஜக மாநில தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.
இந்தநிலையில், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் தலித் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என்று புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் பிஜேபி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. மாநிலத் தகுதியும் கிடைக்கவில்லை. மாறாக பாஜக கூடாரத்தில் குழப்பமும், சண்டையும் தான் ஏற்பட்டு இருக்கிறது.
அதன் விளைவு தான் இப்போது பிஜேபி அமைச்சர் மற்றும் நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமா நாடகம் அரங்கேறி இருக்கிறது.
நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களும் உடனடியாக பிஜேபி – ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் புதிய நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்படுவதும், புதுச்சேரியின் சட்டமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதாகும்.
என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் குழப்பம் வந்த போதும், பிஜேபி கட்சியின் குழப்பம் வருகிற போதும் பழிவாங்கப்படுவது தலித் சமூகத்தை சார்ந்த அமைச்சர்கள் ஆவார்கள்.
ஏற்கனவே சந்திர பிரியங்காவும், இப்போது சாய் சரவணக்குமாரும் பதவியிழந்திருக்கிறார்கள். இது என்.ஆர்.காங்கிரஸ் – பிஜேபி கட்சியின் தலித் சமூக விரோத போக்கை காட்டுகிறது. மேலும் சமூக நீதிக்கு எதிரானதாகும்.
நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்து மக்கள் நம்பிக்கையிழந்திருக்கிற என்.ஆர். காங்கிரஸ்- பிஜேபி கூட்டணிக்குள் ஏற்பட்டியிருக்கிற குழப்பம் என்பது பதவி ஆசைக்காகவும், அதிகாரப் பசிக்காகவும் தான் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். v p ramalingam set to become puducherry