ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் சம்பந்தமான வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் அந்நிய முதலீட்டைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இவர்கள் மீது பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் சிபிஐயினால் கைது செய்யப்பட்டு, அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஜூலை 3ஆம் தேதி வரை அவரைக் கைது செய்யத் தடை விதித்தது. ஆனால், சிபிஐ விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு தருமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ஜூன் 6ஆம் தேதியன்று விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது சிபிஐ.
