அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்திய பயணம் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகவும் சிறப்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் எரிசக்தி இறக்குமதியில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பிரதமர் மோடி சிறந்த நண்பர்; சிறந்த மனிதர். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை பெருமளவு மோடி நிறுத்திவிட்டார். நான் அங்கு வர வேண்டும் என்று மோடி விரும்புகிறார். நான் இந்தியாவுக்கு செல்வேன். இவ்வாறு டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில் டொனால்ட் டிரம்ப் இந்தியா வருவதாக அறிவித்துள்ளார். இரு நாடுகளும் 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை தற்போதுள்ள 191 பில்லியன் டாலரில் இருந்து 500 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளன. அமெரிக்கா அண்மையில் இந்திய இறக்குமதிகள் மீது 50% கூடுதல் வரி விதித்தது; குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் 25% கூடுதல் வரி விதிக்கப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
