அரசியல் கூட்டங்களுக்கு நேரக் கட்டுப்பாடு… 20 லட்சம் காப்புத் தொகை : அனைத்துக் கட்சி கூட்டத்தில் பரிந்துரை!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் (ம) நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று (நவம்பர் 6) நடைபெற்றது.

இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என சுமார் 20 கட்சிகள் கலந்துகொண்டுள்ளன.

ADVERTISEMENT

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இயற்கைவளங்கள்துறை அமைச்சர் ரகுபதி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 அப்போது சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதாவது, கூட்டத்தால் ஏற்படும் பொது சொத்துகளின் சேதத்தை சரி செய்ய காப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5000 -10,000 பேர் இருந்தால் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

10,000 முதல் 20,000 பேர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 3 லட்சம்

20,000 – 50,000 பேர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 5 லட்சம்

50,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சியின்போது 100 நபர்களுக்கு 1 நபர் என்ற விகிதத்தில் கட்சியின் தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும்.

குடிநீர், சுகாதாரம், உணவு, நடமாடும் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கூட்டத்தினரை முறைபடுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக தன்னார்வலர்களுக்கான பணிகள் குறித்து விரிவான திட்டம் வகுக்க வேண்டும்.

நின்று கொண்டிருக்கும் ஒவ்வொரு 500 நபர்களுக்கும் மற்றும் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் தனித்தனியே தடுப்பு பகுதிகள் (Zones) அமைத்திட வேண்டும்.

முக்கிய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அடையாள அட்டை அல்லது பேட்ஜ் வழங்குவதுடன், அவர்கள் காவல் துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

. இடத்தின் கொள்ளளவு (Capacity), பாதுகாப்பு, போக்குவரத்து, வாகன நிறுத்தம், அவசரகால ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு காவல் உட்கோட்ட அதிகாரி மனுவை பரிசீலனை செய்வார்.

மனுவுக்கு அனுமதி

கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு_முன்னர், அனுமதி வழங்கப்படும். அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில், அதற்கான காரணம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்படும்.

நிகழ்ச்சி நடத்தப்படும் இடம், கூட்டம், கலந்துகொள்வோரின் விவரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், காவல் உட்கோட்ட அதிகாரி, அந்நிகழ்ச்சியை குறைந்த ஆபத்து (Low Risk), மிதமான ஆபத்து (Medium Risk) மற்றும் அதிக ஆபத்து (High Risk) கொண்ட நிகழ்ச்சியாக வகைப்படுத்த வேண்டும்.

மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், அமைப்பாளர்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மீண்டும் புதிய மனுவாக கொடுக்கலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் ஒரே இடத்திற்கு, ஒரே நேரத்திற்கு பெறப்பட்டால், முதலில் வருபவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எத்தகைய நிகழ்வுகளுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும் / பொருந்தாது
5000 பேருக்கு அதிகமாக கூடும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கலாச்சார / மத வழிபாடு நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தும்.

ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில்/வழித்தடத்தில் மரபுப்படி நடத்தப்படும் மத வழிபாடு மற்றும் மரபு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.

இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சார்ந்த நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பொருந்தாது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலங்களில் தேர்தல் ஆணைய விதிகள்/நெறிமுறைகள் (SUVIDHA PORTAL) பின்பற்றப்படும்.

எனினும், கூட்டத்தின்போது பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்குதல் போன்றவற்றிற்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்.

காவலர்கள் நியமித்தல்

குறைந்த ஆபத்து உள்ள இடங்களில் 200 பேருக்கு ஒரு காவலர், மிதமான ஆபத்து உள்ள இடங்களில் 100 பேருக்கு 1 காவலர், அதிக ஆபத்து உள்ள இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் 50 பேருக்கு 1 காவலர் பணியமர்த்தப்படுவர்.

நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கான நிபந்தனைகள்
அமைப்பாளர்கள் குறிப்பிட்டதைவிட 50%-க்கு அதிகமாக கூட்டம் கூடினால் அது தீவிர விதிமீறலாக கருதப்பட்டு, காப்புத் தொகை (Security Deposit) பிடித்தம் மட்டுமின்றி, சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

நிகழ்ச்சிக்கு முன்பாக 2 மணி நேரத்திற்கு மேலாக மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ ஆகியவை பொதுவாக 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். எனினும், நிகழ்ச்சியின் தன்மையைப் பொறுத்து காவல் உட்கோட்ட அதிகாரி அதிகபட்ச காலஅளவை முடிவு செய்யலாம்.

கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும், முடிவுற்றாலும் கூட்டத்தினர் அமைதியாக கலைந்து செல்வதை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அனுமதி கோரி மனு சமர்ப்பித்தல்

மனு அளிக்கும் காலக்கெடுவை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு 10 நாட்கள் முன்பாகவும், 15 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்படாத மாற்று இடத்திற்கு 21 நாட்கள் முன்பாகவும், 30 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும்.

முதலுதவி மையங்கள், அவசரகால மருத்துவ ஊர்திகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் தன்னார்வலர்கள் விவரங்கள் மனுவில் குறிப்பிட வேண்டும்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தங்கள் கட்சி / அமைப்பின் இரண்டு மூத்த நிர்வாகிகளை கீழ்கண்ட அம்சங்களுக்கு தனித்தனியாக நியமித்து அவர்களது விவரங்களை குறிப்பிட வேண்டும்.
>கூட்டத்தினரின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கு ஒருவர்
>அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு ஒருவர்

ரோடு ஷோ (சாலை வலம்)
ரோடு ஷோ (சாலை வலம்) நடத்த அனுமதி கோரும்போது கீழ்க்காணும் கூடுதல் விவரங்களை மனுவில் தெளிவாக குறிப்பிட வேண்டும்:
ரோடு ஷோ நடத்தவுள்ள வழித்தடம், உரை நிகழ்த்தவுள்ள இடம்

துவங்கும் இடத்திற்கும் முடிவுறும் இடத்திற்கும் சிறப்பு விருந்தினர் வருகை தரக்கூடிய நேரம்
உரை நிகழ்த்தும் இடத்திலும்/வழித்தடத்திலும் எதிர்பார்க்கப்படும் கூட்டம்
அங்கீகரிக்கப்பட்ட இடமாக இல்லாவிட்டால்:

  • பொதுப்பணித் துறை பொறியாளரால் முன்னரே சான்றளிக்கப்பட்ட ஒவ்வொரு சாலை பகுதி மற்றும் உரையாற்றும் இடத்தின் அதிகப்படியான கூட்டத்திறன் குறித்த கணக்கீடு
    ” சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அல்லது மாநில நெடுஞ்சாலை அல்லது உள்ளாட்சி அமைப்பிடமிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் பல்வேறு நிபந்தனைகளுக்கு திமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகவும், தாங்களும் சில பரிந்துரைகளை வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share