மத்திய அரசின் நெடுஞ்சாலை திட்ட அடிக்கல் நாட்டு விழா- கர்நாடகா அரசு புறக்கணிப்பு!

Published On:

| By Mathi

Karnataka Nitin Gadkari

கர்நாடகா மாநிலம் சிவமோகாவில் 9 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைப்பு விடுக்காததால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Karnataka Union Govt

கர்நாடகா சிவமோகாவில் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் 88 கி.மீ நீளமுள்ள 9 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஜூலை 14-ந் தேதி அடிக்கல் நாட்டினார்.

ஷராவதி பாலம் திறப்பு

இந்த நெடுஞ்சாலை திட்டங்கள், புதிதாகத் திறக்கப்பட்ட ஷராவதி பாலம், மல்நாடு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்திற்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்துவதுடன், சிகந்தூர் சவுடேஸ்வரி, கொல்லூர் மூகாம்பிகா கோயில்கள் போன்ற முக்கிய புனிதத் தலங்களுக்கான போக்குவரத்து வசதியை எளிதாக்க உதவிடும்.

தேசிய நெடுஞ்சாலை எண் – 367 – ல் 47 கிலோமீட்டர் நீளமுள்ள பிதர்-ஹம்னாபாத் இடையேயான சாலையை அகலப்படுத்தல், கலபுரகி – பிதர் மாவட்டங்களுக்கு இடையிலான பயண நேரத்தை கணிசமான அளவில் குறைத்திடும். தேசிய நெடுஞ்சாலை எண் – 75 – ல் ஷிராடி காட் பகுதியில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள், மழைக்காலத்தின் போது, குறிப்பாக, முக்கியதத்துவம் வாய்ந்த மங்களூரு-பெங்களூரு வழித்தடத்தில் பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்து இயக்கத்தை உறுதி செய்யும்.

ஷாஹாபாத்தில் ஒரு சாலை மேம்பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் – 50 – ல் காகினா ஆற்றின் மீது பாலம் அமைப்பது, கலபுரகி – ராய்ச்சூர் இடையே தடையற்ற போக்குவரத்து இணைப்பை உறுதி செய்யும். கூடுதலாக, பெங்களூரு – மைசூரு இடையே கட்டுப்பாட்டு விரைவுச் சாலையில் சாலைப் பாதுகாப்பு மேம்பாடுகள் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு இடையே விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்கப் பயணத்தை எளிதாக்குவதுடன், பயண நேரத்தையும், எரிபொருள் பயன்பாட்டையும் கணிசமான அளவில் குறைக்கும்.

கர்நாடகா அரசு புறக்கணிப்பு

மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில், கர்நாடகா மாநில அரசுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் இந்த நிகழ்ச்சியை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடமும் தொலைபேசியில் தெரிவித்தேன். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நான் மற்றும் சிவமோகா பொறுப்பு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சி என்பதை பேச்சளவில்தான் வைத்துள்ளது; நடைமுறையில் கூட்டாட்சியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என சாடினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share