ADVERTISEMENT

ஓய்வூதியத்தை உயர்த்துவீங்களா மாட்டீங்களா? மத்திய அரசின் பதில் இதுதான்!

Published On:

| By Santhosh Raj Saravanan

union govt stirt reply on increasing minimum pension for eps 95 scheme

பென்ஷன் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உயர்த்துவது குறித்த தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

EPS-95 ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை உயர்த்தும் கோரிக்கை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுந்துள்ளது. தற்போதுள்ள ரூ.1,000 ஓய்வூதியம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஈடுகொடுக்கப் போதுமானதாக இல்லை என லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கிடையில், ஓய்வூதிய நிதியின் நிதி நிலைமை மற்றும் எதிர்கால பொறுப்புகளை கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த டிசம்பர் 1, 2025 அன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, EPS-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்தும் திட்டம் தற்போது இல்லை எனறு திட்டவட்டமாகக் கூறிவிட்டார். 1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட EPS-95 திட்டம், 80 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கிறது. இந்தத் திட்டம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

2014 முதல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆகவே உள்ளது. பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தொகை போதுமானதாக இல்லை என ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாக வாதிட்டு வருகின்றனர். ஓய்வூதியதாரர்களின் சங்கங்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அகவிலைப்படியை (DA) தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், உயர் ஓய்வூதியப் பலன்களை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய மக்களவை கூட்டத்தொடரில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது, EPS-95 ஓய்வூதியதாரர்களுக்கு ஏன் அகவிலைப்படி வழங்கப்படுவதில்லை, மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பை வலுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதிலளித்த அமைச்சர், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்தும் திட்டம் தற்போது இல்லை என்று கூறினார்.

புதிய நிதி ஆதாரம் இல்லாமல் ஓய்வூதியத்தை அதிகரிப்பது நிதியின் ஸ்திரத்தன்மைக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அரசு கூறியுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்ச பலன்களை வழங்குவதில் அரசு உறுதியாக இருந்தாலும், நீண்ட கால நிலைத்தன்மை மற்றும் எதிர்கால கடமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியது. இருப்பினும், இந்த விஷயத்தில் தெளிவான நடவடிக்கைகள் அல்லது காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ADVERTISEMENT

ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு தரப்பில் நிதி நிலைமை ஒரு சவாலாக இருந்தாலும், ஓய்வூதியதாரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share