பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மீது சாமானிய மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு சிக்கல்கள் மற்றும் வருமான வரிச் சுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளுக்காகக் காத்துள்ளனர்.
மாதச் சம்பளக்காரர்களின் எதிர்பார்ப்பு (Income Tax Relief): நடுத்தர வர்க்கத்தின் மிக முக்கியமான எதிர்பார்ப்பு வருமான வரிச் சலுகைகள் தொடர்பானதுதான்.
நிலையான கழிவு (Standard Deduction): புதிய வரி முறையில் தற்போதுள்ள ₹75,000 நிலையான கழிவுத் தொகையை, ₹1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது பணவீக்கத்தைச் சமாளிக்க மாதச் சம்பளக்காரர்களுக்கு உதவும்.
வரி வரம்புகள் (Tax Slabs): 30% வரி வரம்புக்கான வருமான உச்சவரம்பை ₹24 லட்சத்திலிருந்து உயர்த்துவது அல்லது குறைந்த வருமானப் பிரிவினருக்கான வரி விகிதங்களைக் குறைப்பது போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கையில் கிடைக்கும் பணத்தை (Disposable Income) அதிகரிக்க உதவும்.
விவசாயிகளுக்கான ‘பூஸ்டர்’ (PM Kisan): விவசாயத் துறையைப் பொறுத்தவரை, ‘பிஎம் கிசான்’ (PM Kisan) திட்டம் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை ₹9,000 அல்லது ₹12,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக உள்ளன. இது கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளின் குரல்: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இல்லத்தரசிகளுக்குப் பெரும் சுமையாக உள்ளது. வணிகப் பயன்பாட்டக்கான சிலிண்டர் விலைகள் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் உயர்ந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மானியம் அல்லது விலை குறைப்பு அறிவிப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரயில்வே மற்றும் வேலைவாய்ப்பு: ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘கவாச்’ (Kavach) தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது மற்றும் புதிய ரயில்களுக்கான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேசமயம், இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் கூடுதல் நிதியை எதிர்பார்க்கின்றனர்.
மொத்தத்தில், இந்த பட்ஜெட் வெறும் எண்களின் தொகுப்பாக இல்லாமல், சாமானியனின் சுமையைக் குறைக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
