ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.வையும், அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.வையும் குறிப்பிட்டு பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் சுமார் 5000 மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 16) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது அவர், “இந்த விழா அரசு விழாவா? அல்லது மகளிர் மாநாடா? என்று கேட்கும் அளவுக்கு எழுச்சியோடு நடைபெறுகிறது. இன்னொரு சிறப்பு, இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் நம்முடைய இயக்கம் கிடையாது. இப்போது நம்முடைய கூட்டணியும் கிடையாது.
சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகிய இருவரும் சேலத்துக்கு நம்முடைய அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது என போட்டி போட்டு பாராட்டியிருக்கிறார்கள். ஒற்றுமையாக பாராட்டியிருக்கிறார்கள். இதே ஒற்றுமையோடு அவர்கள் மக்கள் பணி ஆற்ற வேண்டும்” என்று கூறினார்.
பாமக இரு தரப்பாக பிரிந்திருக்கிறது. இதில் நிறுவனர் ராமதாஸ் தரப்புடன் எம்.எல்.ஏ அருள் செயல்பட்டு வருகிறார். அன்புமணியுடன் எம்.எல்.ஏ சதாசிவம் உள்ளார். இந்தநிலையில் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று உதயநிதி கூறியிருப்பது அரசியலில் கவனத்தை பெற்றுள்ளது.
உதயநிதி இப்படி பேசிக்கொண்டிருந்த போது, சதாசிவம், தனக்கு அருகில் அமர்ந்திருந்த அருளின் கையை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து கட்சி பாகுபாடின்றி மக்கள் பிரதிநிதிகளை அழைக்கும் துணை முதல்வருக்கு பாராட்டுகள் என்று சதாசிவமும், அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டுகள் என்று அருளும் உதயநிதியை பாராட்டியுள்ளனர்.