புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு கட்டாயம் இரண்டு ஹெல்மெட் வழங்க வேண்டும் என்று வாகன உற்பத்தியாளர்களுக்கும் டீலர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. two helmet mandatory for new bikes
இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.
அதன்படி புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்களில் ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
தற்போது சுமார் 40 சதவிகித இருசக்கர வாகனங்களில் இந்த வசதி இல்லை. 125 சிசிக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களில் மட்டுமே இந்த வசதி கட்டாயமாக உள்ளது.
இந்த சூழலில் தான் புதிதாக தயாரிக்கப்படும் ஸ்கூட்டர், பைக்குகள் உள்ளிட்ட அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அதேபோன்று இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் டீலர்களும் வாகனங்களை வாங்குவோருக்கு கட்டாயமாக இந்திய தரச் சான்று பெற்ற இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அந்த வகையில் வரும் 2026 ஜனவரி முதல் புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும் போது இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன.
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் 44% இருசக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு இந்த புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வரவுள்ளது.
அதுபோன்று ஏபிஎஸ் தொழில்நுட்பம் இருந்தால் திடீரென பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் லாக் ஆவது தவிர்க்கப்படும். இதனால் 35 முதல் 45 சதவீதம் வரையிலான விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இரு சக்கர வாகனங்களில் செல்லும் இரண்டு நபர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. two helmet mandatory for new bikes