கரூர் பரப்புரை கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் அறிவித்த ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை, 39 பேரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் RTGS மூலம் இன்று (அக்டோபர் 18) செலுத்தப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27அன்று நடந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்குவதாக அறிவித்தார். தவெக தலைவர் விஜய் தரப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் சென்னையில் உள்ள தனது வீட்டில் உள்ள விஜய், கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வீடியோ கால் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில், போலீசார் அனுமதி காரணமாக கரூருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாக, சம்பவம் நடந்து 20 நாட்கள் கழித்து, உயிரிழந்த 39 பேரின் குடும்பத்தினருக்கு விஜய் கூறியபடி நிவாரணத் தொகையான ரூ.20 லட்சம் அவரவர் வங்கிக் கணக்கில் இன்று ஆன்லைன் பணப்பரிவர்த்தனை (RTGS) மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பிரித்திக் மற்றும் சந்திரா ஆகிய இருவரின் குடும்பத்தினரில் யாருக்கு தொகை வழங்குவது என்பதில் சிக்கல் உள்ளதால் இன்னும் செலுத்தப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை தவெக தரப்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூ. 20 லட்சம் நிவாரணத் தொகை என்ற வகையில் இறந்தவர்களின் 39 குடும்பத்தினருக்காக மொத்தம் ரூ.7.8 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
