தவெக சார்பில் யாரும் தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று அக்கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து 20 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த துக்கத்திலிருந்து இன்னும் கரூர் மக்கள் மீளவில்லை. ஆனால் இதுவரை விஜய் கரூர் சென்று பார்க்கவில்லை. இப்போது செல்வார், அப்போது செல்வார்… காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டிருக்கிறது என தவெக சார்பில் சொல்லப்படுகிறதே தவிர, அவர் எப்போது செல்வார் என அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.
இந்தசூழலில் அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு அறிவுரையை இன்று (அக்டோபர் 18) வழங்கியுள்ளார்.
அதில், தவெக சார்பில் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். கரூர் சம்பவத்தால் நம்மை விட்டு பிரிந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே விஜய்யின் பனையூர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. கரூர் மக்கள் துயரில் இருக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்றாலும் பரவாயில்லை…. இப்படி கொண்டாடட்டத்தில் ஈடுபடலாமா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
