கரூரில் 41 பேரின் உயிரிழப்பை தொடர்ந்து வழக்குகளை எதிர்கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக முன்னாள் நீதி அரசர் அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணையம் கரூரில் விசாரணை நடத்தி வருகிறது.
கரூர் நகர போலீசரும் தமிழக வெற்றிக்கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் என பிரச்சாரத்துக்கு ஏற்பாடுகளை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
இவர்கள் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் இவர்களுக்கு முன் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி ஜோதிராமன் இவர்களது மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் இருவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் தமிழக வெற்றி கழகத்துக்கு காட்டமான கேள்விகளை எழுப்பினார்.
என்ன மாதிரியான கட்சி இது? அதன் தலைவருக்கு தலைமை பண்பே கிடையாது. அந்தக் கட்சிக்கு காவல்துறை ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை? அந்தப் பிரச்சார பேருந்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? காவல்துறையினர் என்ன நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அதோடு கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவையும் அமைத்து உத்தரவிட்டார்.
அதுபோன்று தவெக தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் ட்விட்டர் பதிவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இப்படி தமிழக வெற்றிக்கழகத்துக்கு எதிராக உத்தரவுகள் வந்திருக்கும் நிலையில், அக்கட்சி தலைமை உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.
அதாவது முன் ஜாமின் மறுப்பு, சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு, ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு ஆகிய மூன்று உத்தரவுகளையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை தவெக மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லி சென்றுள்ள ஆதவ் அர்ஜுனா, சட்ட வல்லுனர்களை சந்தித்து இது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.