மதுரையில் தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
நாளை மதுரை பாரபத்தி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது.
இதையொட்டி கடந்த ஒரு மாதமாக பாரபத்தியில் மாநாட்டுக்கான மேடை, பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் என பல்வேறு பணிகளும் நடைபெற்று வந்தது.
மாநாட்டுக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) 100 அடி உயரத்தில் கொடிகம்பம் நடும் பணி நடைபெற்றது.
கிரேன் மூலம் கொடி கம்பத்தை நிறுத்தும் போது, அது எதிர்பாராத விதமாக சாய்ந்து விழுந்ததில் அதன் அருகே நின்று கொண்டிருந்த கார் சேதமடைந்தது.

நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த கொடிக்கம்பத்தில் தான் விழாவின் முதல் நிகழ்வாக விஜய் கொடி ஏற்றவிருந்தார். ஆனால் கொடி கம்பம் சாய்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது. கம்பத்தின் முன்பகுதி, அடியில் போல்டு போடும் இடத்தில் சேதமடைந்திருப்பதால் நாளைக்குள் மற்றொரு கொடி கம்பம் ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கவனக்குறைவாக பணி செய்ததே இந்த விபத்துக்கு காரணம் என தகவல்கள் வருகின்றன.