சேலத்தில் கூட்டத்தில் விஜயை பார்க்கச் சென்ற வடமாநில தொழிலாளி உயிரிழந்த நிலையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாயில் பகுதியில் பத்திரிகையாளர்களுக்கும் தவெகவினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (பிப்ரவரி 13) சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட மாநில தொழிலாளி சுராஜி என்பவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மயக்கமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, தவெக சேலம் மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன் உயிரிழந்த சுராஜியின் உடலை பார்க்க தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அவர் வெளியேறியபோது, பத்திரிகையாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது பின்னால் வந்த ஒரு வாகனம் பத்திரிகையாளர்கள் மீது மோதுவது போல் வந்ததால், அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து, “இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது?” என்று செய்தியாளர்கள் தமிழன் பார்த்திபனிடம் கேள்வி எழுப்ப முயன்றனர். அப்போது காரில் இருந்த தவெக நிர்வாகிகள் இறங்கி வந்து ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவியது.பின்னர், பத்திரிகையாளர்களைத் தாக்க முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக தவெக நிர்வாகி ஒருவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
