தவெக வேட்பாளர் சர்ச்சை : பாலியல் புகாரில் சிக்கியவருக்கு சீட் கொடுத்த விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து பிரச்சார மேடைகளில் பேசி வரும் விஜய், பாலியல் புகாரில் சிக்கியவருக்கு சீட் வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உள்ளார். நேற்று முன்தினம் அவர் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். தொடர்ந்து திமுக-தவெக இடையே மட்டுமே போட்டி என்று கூறி வரும் விஜய் அறிமுகப்படுத்திய வேட்பாளர்களில் பெரும்பாலானோர் அதிமுகவில் இருந்து வந்த 32 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர திமுக, நாதக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், விஜய் சீட் ஒதுக்கியவர்களில் சிலர் மீது சர்ச்சைக்குரிய வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த விஜய், கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்து வெறும் 10 நாட்களே ஆன சந்திரகாண்டீபன் என்பவருக்கு பேராவூரணி தொகுதியில் சீட் ஒதுக்கியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து தனது பிரச்சார மேடைகளில் பேசி வருகிறார். நேற்று வேட்புமனு தாக்கல் செய்த விஜய், பெரம்பூரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய போதும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில் தவெகவில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசியல் விமர்சகர் பொன்ராஜ் கடந்த சில தினங்களுக்கு முன் தவெக பெண் தொண்டர்களை கடுமையாக விமர்சித்த நிலையில், டிஜிபி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று புகார் அளித்தார். அதே சமயம், தவெக கட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் பெண்களுக்கு எதிராக அநாகரிகமான, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்யப்படுவதாகவும், அதற்கு விஜய் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து, தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், பூவிருந்தவல்லி தொகுதியின் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரகாசம் (எ) குட்டி மீது, கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த ஒரு பெண், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாலியல் சீண்டல் புகார் அளித்துள்ளார்.மேலும், இந்த பாலியல் சீண்டல் குறித்து தவெக தலைமையிடம் 6 மாதங்களுக்கு முன்பே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அவர் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share