ADVERTISEMENT

‘தவெகவினர் சொன்ன எதையும் கேட்கல’ : கரூர் போலீசார் குற்றச்சாட்டு!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போலீசார் சொன்ன எதையும் கேட்கவில்லை என்று கரூர் போலீசார் எப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கரூர் போலீசார் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

அதில், ‘கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கட்சியின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். 

ADVERTISEMENT

அதன் அடிப்படையில் செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. 

செப்டம்பர் 27ஆம் தேதி பிரச்சாரத்தை முன்னிட்டு சுமார் 500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு விஜய் கரூர் வர இருப்பதாக தொலைக்காட்சிகளில் சொன்னதை தொடர்ந்து காலை 10 மணியிலிருந்து பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் வர தொடங்கினர். 

இதனால் வேலுசாமிபுரம் மெயின் ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோயில் ஜங்ஷன், திருக்காம்புலியூர் ரவுண்டானா, மதுரை சேலம் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் வர தொடங்கியது. 

கரூர் மாவட்ட செயலாளர் தனது விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் தான் வருவார்கள் என்று தெரிவித்திருந்தார். ஆனால் பிரச்சார கூட்டத்திற்கு 25,000க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

இந்த நிலையில் மாலை 4:45 மணிக்கு விஜய் கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்து தெருவில் அனுமதி இல்லாமல் ரோடுஷோ நடத்தி போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தி அதிக இடங்களில் நிபந்தனைகளையும் மீறி வரவேற்புகள் நடத்தி காலதாமதம் செய்துள்ளார். 

மாலை 6:00 மணிக்கு முனியப்பன் கோயில் ஜங்ஷனில் ராங் ரூட்டில் அதாவது ரோட்டின் வலது புறம் கட்சியின் தலைவர் விஜய், வாகனங்களை அழைத்துச் சென்று மாலை 07:00 மணிக்கு வேலுசாமிபுரம் ஜங்ஷனில் தொண்டர்களின் கூட்டத்துக்கு நடுவே நிறுத்தி சிறிது நேரம் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால் அதை இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடினர். 

மக்களிடையே தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல், கொடுங்காயம் உயிர் சேதம் ஏற்படும் என்று மாவட்ட செயலாளர் மதியழகனிடமும், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமும் இணை செயலாளர் நிர்மல் குமாரிடமும் போலீசார் பலமுறை எச்சரித்தனர். 

ஆனால் சொன்னதை கேட்காமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் ஈடுபட்டதால் போதிய பாதுகாப்பு, போலீசார் வழங்கிய போதும் தவெக தொண்டர்கள் சரிவர ஒழுங்குபடுத்தாமல் சாலை அருகில் உள்ள கடைகளுக்கு நிழல் தர வேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகர கோட்டைகளிலும் மற்றும் அருகில் இருந்த மரங்களிலும் ஏறி உட்கார செய்தனர். 

இதனால் தகர குட்டகை உடைந்ததாலும், மரம் முறிந்ததாலும் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்றிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்ததால் பொதுமக்கள் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. 

கரூர் கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10:00 மணி வரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்குடன் கட்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை நான்கு மணி நேரம் தாமதப்படுத்தினர். 

இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் உடல் நிலையில் சோர்வடைந்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் அதிக அளவில் மிதிபட்டு 11 அப்பாவி மக்கள் (அன்றை தினம் இரவு 9.45 மணிக்குள்) உயிரிழந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share