தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் இருவரும் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் நடந்த விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தனி விமானத்தில் விஜய் உள்ளிட்டோர் சென்னை சென்று விட்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து தலைமறைவான புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் இருவரையும் தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் இருவரும் முன்ஜாமின் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று நீதிபதி ஜோதிராமன் முன்பு கடந்த 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பிலும், தமிழக வெற்றி கழகம் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இறுதியில் அரசு தரப்பு வாதத்தை ஏற்று புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவருக்கும் ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இந்த சூழலில் இருவரையும் கைது செய்ய போலீசார் தேடி வரும் நிலையில், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கரூர் சம்பவத்தை அடுத்து ஏற்கெனவே தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்று பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.