கூட்டணி ஆட்சி தேவை இல்லை என்றால் திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அறிவிக்க தயாரா என தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் கேட்கும் “ஆட்சியில் பங்கு” என்ற கருத்து தமிழகத்திற்கு ஒத்து வராது என்று முதல்வர் ஸ்டாலின் பேசியது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக கொள்ளைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதால் மாநிலத்தில் ஒரு கூட்டணி ஆட்சி கொடுக்கக் கூடாது என்று அர்த்தம் கிடையாது. கூட்டணி ஆட்சியோடு ஒரு சுய ஆட்சியை கொடுக்க முடியும்.
திமுக 130 க்கும் மேற்பட்ட இடங்களை ஜெயித்துள்ள நிலையில், அவர்கள் ஜெயித்த இடங்களில் கூட்டணி கட்சிகளின் பங்கு இருக்கிறதா? இல்லையா? முதல்வர் ஸ்டாலின் உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால் மட்டும்தான் திமுகவினுடையது. மீதி இருக்கும் மூன்று கால்கள் கூட்டணி கட்சிகளுடையது. அப்படி இருக்கும்போது, அவர்களை வெறும் ஓட்டு வங்கியாக பயன்படுத்திவிட்டு, ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல் அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள்.
அப்படி உண்மையிலேயே திமுகவுக்கு ‘நாங்கள் எந்தக் கட்சிக்கும் அதிகாரப் பகிர்வு கொடுக்க மாட்டோம்’ என்ற எண்ணம் இருந்தால், தைரியமாக தனித்து போட்டியிடலாமே. அதை விட்டுவிட்டு, அவர்களது ஓட்டு வங்கி மட்டும் வேண்டும், ஆனால் அவர்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு கொடுக்க முடியாது என்பது எந்த வகை மனநிலை என்று புரியவில்லை. நீங்கள் கூட்டணிக்கான இடங்களைப் பிரித்துக் கொடுக்கிறீர்கள். கூட்டணி கட்சிகளும் திமுக கட்சியினர் போட்டியிடும் இடங்களில் வேலை செய்கிறார்கள் அல்லவா? அவர்களது ஓட்டு வங்கியும் திமுகவுக்கு வருகிறதே” என்று அருண் ராஜ் தெரிவித்தார்.
அப்போது, “ஆட்சியில் பங்கு தருவோம்” என்று விஜய் கூறியதால் காங்கிரஸ் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறது என்று பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு, “காங்கிரஸ் இப்படி ஒரு கோரிக்கையை வைத்திருந்தால் அதில் ஒரு தவறு இல்லை என்றுதான் நான் பார்க்கிறேன். இதுவரைக்கும் அதற்கான வாய்ப்பே இல்லை; திமுக கொடுப்பதை மட்டும்தான் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது நட்புச் சக்திகள் வந்தாலும் வராவிட்டாலும், எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றலும், மக்கள் ஆதரவும் எங்களிடம் இருக்கிறது என்ற முழு நம்பிக்கை உள்ளது. இருந்தாலும், காங்கிரஸ் கட்சி இது போன்ற ஒரு கோரிக்கையை வைத்தாலும் முற்றிலும் தவறில்லை என்பதுதான் எங்கள் கருத்து.” என்றார்.
