சாதி பெயரை கேட்டேனா? – பட்டிமன்ற பேச்சாளர் ராஜா விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சாதி குறித்து கேட்கும் அளவிற்கு நான் சிறிய புத்தி கொண்டவன் இல்லை என்று பட்டிமன்ற பேச்சாளர் ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அட்லாண்டா நிகழ்ச்சியில் பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தனக்கு உணவு சமைத்து எடுத்து வந்த பெண்ணிடம் ஜாதி குறித்து கேட்டதாக செய்திகள் பரவியது. அந்த பெண்ணின் சகோதரர் ராஜாவை கண்டித்து வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் ராஜா நான் சாதி குறித்து கேட்கும் அளவிற்கு சிறிய புத்தி கொண்டவன் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ” அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு நான் வரும்போது, பெண்கள் எங்களுக்கு உணவு எடுத்து வந்தார்கள். இதுபோன்ற பல தமிழ்ச் சொந்தங்கள் தங்கள் வீடுகளில் சமைத்து எங்களுக்கு உணவு எடுத்து வருவார்கள். சில நேரங்களில் அந்த உணவு நமது ஊரை விடவே சுவையாக இருக்கும். அப்படி வருபவர்களில் சிலர் தங்கள் ஊர் பெயரையும் சொல்வார்கள். அப்படி ஒருவர் பேசும்போது “நான் காரைக்குடி” என்று சொன்னார். அதற்கு நான் “செட்டிநாடா?” என்று கேட்ட ஞாபகம் இருக்கிறது. “செட்டியாரா?” என்று கேட்கவில்லை.

அவர் யார், எந்த சாதி என்று எல்லாம் யோசிக்கிற அளவுக்கு எனக்குச் சின்னப் புத்தி இல்லை. இத்தனை ஆண்டுகளாக மக்களைச் சந்தித்து வருகிறேன். எங்கேயாவது யாராவது “நான் சாதி, சமய உணர்வுகளோடு இருந்தேன்” என்று சொன்னதாகக் கூறியிருக்கிறார்களா? தமிழ்ச் சாதி என்ற ஒன்றைத்தான் நான் பெருமையாகக் கருதுகிறேன். இதில் வேறு சாதி எதுவும் இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துள்ளேன்.

ADVERTISEMENT

அவ்வளவு தொலைவுக்கு நாங்கள் வரும்போது எங்களைத் தேடி வந்து அன்போடு உணவு தருபவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் உறவினர்களைவிட மிக நெருக்கமாகவே தெரிகிறார்கள். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று தமிழ்ச் சொல்கிறது.

ஒரு மணி நேரம் வரை பயணம் செய்து வந்து உணவு கொடுக்கும் பிள்ளைகளின் அன்பிற்கு நிகர் எதுவும் இல்லை. அப்படிப்பட்டவர்களைப் பார்த்து நான் சாதி குறித்து விசாரிப்பேனா? உண்மையில் மன வலியோடு இதைப் பேசுகிறேன். எந்தக் காலத்திலும் நான் சாதிய உணர்வோடு இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவது இல்லை. தமிழ்ச் சொந்தங்கள் தயவு செய்து இந்தக் கருத்துக்களைப் புறந்தள்ளுங்கள்.” என ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share