2026 தேர்தலில் அமமுக தவெகவுடன் கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரன் சூசகமாக பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே வியூகம் வகுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று (நவம்பர் 15) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
தேர்தல் ஆணையம் எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது திமுக தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அலுவலர்கள்தான் எஸ்ஐஆர்-ஐ செயல்படுத்துவார்கள். எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து சரியாக செயல்பட்டால் தேர்தல் ஆணையத்தாலோ அல்லது வேறு யாராவதோ என்னதான் செய்ய முடியும். இதுதான் என்னுடைய கருத்து” என்றார்.
மேலும் அவர், “நான், ஓபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஒருவருக்கு ஒருவர் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்” என்றும் கூறினார்.
கூட்டணி குறித்து பேசிய டிடிவி தினகரன், “எங்களோடு சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிவை அறிவித்துவிடுவோம். டிடிவி தினகரன் தான் தவெகவை மறுத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். அவரவர் மன ஆசையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று சில கட்சிகள் பேசிக்கொண்டிருப்பது உண்மை. எந்த கட்சி என்று இப்போது சொல்வது நாகரிகமாக இருக்காது.
அதேபோன்று நான் எந்த கட்சியையும் தேடி போய் பேசவில்லை. அந்த அவசியம் அமமுகவுக்கு இல்லை” என தெரிவித்தார்.
விஜய்யுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நிர்வாகிகளுடன் கலந்து பேசிதான் முடிவெடுக்கப்படும்.
2026 தேர்தலில் ஆளுங்கட்சி கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று நான் நினைக்கிறேன். துரோகத்தை வீழ்த்த வேண்டும். அமமுக இடம் பெறும் கூட்டணி வெற்றி பெறும்” என்று கூறினார்.
