“பாஜக மூலம் தான் பேச்சு.. என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா?” – டிடிவி தினகரன் ஓபன் டாக்

Published On:

| By Pandeeswari Gurusamy

TTV Dhinakaran AIADMK

இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எந்த ஒரு பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை கே.கே. நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் டிடிவி தினகரன் இன்று (பிப்ரவரி 24) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலா ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு, டி.டி.வி. தினகரன் பதிலளிக்கையில், “இன்றைக்கு என்டிஏ கூட்டணியில் அம்மாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் ஓரணியில் திரண்டிருக்கிறோம். தீய சக்தியான திமுகவின் இந்த மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம். யாரோ சிலர் ஒதுங்கி இருப்பவர்கள் அல்லது விலகி இருப்பவர்கள். ‘சீப்பை ஒளிப்பதால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியாது’ என்பதை உணர்ந்து, அதிமுக தலைமையில் உள்ள என்டிஏ கூட்டணியில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைவதற்காக அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்,” என்றார்.

ADVERTISEMENT

முழு மனதோடு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்குவதில் டிடிவி தினகரன் போன்றவர்களுக்கு விருப்பமில்லை, அது ஒரு நாடகம் என சிலர் பேசுவது குறித்த கேள்விக்கு, “அப்படியா? யாரோ சிலர் பேசுவது எல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மக்கள் விரோத திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே இலக்கோடு இணைந்திருக்கிறோம். எங்கள் இலக்கில் வெற்றி பெறுவோம்,” என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறதா என்ற கேள்விக்கு, “தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவடைந்துள்ளது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், அதிமுகவும் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பிரிந்திருந்த நிலையில், அவர்கள் எப்படி ஒன்றிணைவார்கள் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று அமமுகவும், அதிமுகவும் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை புரட்சித் தலைவர் ஜெயலலிதாவின் ஆட்சியை என்டிஏ கூட்டணி தலைமையில் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முழுவதும் மற்றும் புதுச்சேரியிலும் ஒன்றிணைந்திருக்கின்றன,” என்றார்.

ADVERTISEMENT

மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணியில் உள்ளோம். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் இணைந்துள்ளோம். ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். கருத்து வேறுபாடுகளைத் துறந்து இன்று ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கட்சிக்கான தொகுதி ஒப்பந்தத்தை பாஜக மூலம் அதிமுகவுடன் பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம்.

கூட்டணியில் மிகவும் முக்கியமான மற்றும் சென்சிட்டிவான விஷயம் எந்தெந்த தொகுதிகள் என்பதுதான். அதனால் தான் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுகவிற்கு பாஜக மூலம் தொகுதிகளைப் பெறுவோம் என்று சொன்னேன்.

ADVERTISEMENT

நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எந்தச் சிறிய பிரச்சினைக்கும் இடமளிக்காமல் ஜெயலலிதா ஆட்சியை அமைப்பதே எங்களது ஒரே இலக்கு. யாருக்கும் சிறிய மனவருத்தமும் வரக்கூடாது என்பதற்காகத்தான் நான் போட்டியிடவில்லை. அதுபோல் அமமுகவிற்கு தகுதியான வேட்பாளர்களை கௌரவமான முறையில் பெறுவதற்காக பாஜக மூலம் உடன்படிக்கையை எட்டுவோம்.

பாஜகவின் வழிகாட்டுதலின்படி அதிமுக கூட்டணியில் இடங்களைப் பெற்று, அமமுக வேட்பாளர்கள் இந்த முறை வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் செல்வார்கள்,” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share