எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறியதற்கு ஈபிஎஸ் பதிலளித்துள்ளார்.
தமிழகம் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேசமயம் அதிமுக – பாஜக கூட்டணி… ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது…முன்னாள் எம்.பி மைத்ரேயன் திமுகவில் இணைந்தது என அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் ஒரே மேடையில் பார்ப்பீர்கள். வெகு விரைவில் எல்லோரும் ஒரே மேடையில் தோன்றுவோம் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக திருப்பத்தூரில் இன்று (ஆகஸ்ட் 13) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “நயினார் நாகேந்திரன் தானே சொன்னார். அவரிடமே போய் கேள்ளுங்கள்… பாஜக கூட்டணி உண்டு. ஆனால், அதிமுகதான் தலைமை தாங்குகிறது. மற்றதெல்லாம் நாங்கள் தான் முடிவு செய்வோம். சந்தர்ப்பம், சூழ்நிலை வரும்போது அதற்கான பதிலை கொடுப்போம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் இருக்கிறது. அதற்குள் இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும்” என்றார்.
மைத்ரேயன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, “ இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம். இந்த கட்சிக்கு போகக்கூடாது? அந்த கட்சிக்கு போகக்கூடாது? என்று யாரும் தடுக்க முடியாது. மற்றக் கட்சிகளில் யாரும் போகவில்லையா? எல்லாருமே கட்சி மாறி மாறி தான் இருக்கிறார்கள்.
அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். மீண்டும் அவரை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டோம். அதே மாதிரி மைத்ரேயனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தான். மீண்டும் சேர்த்தோம். மறுபடியும் போய்விட்டார். இப்படிப்பட்டவர்கள் எந்தக் கட்சியிலுமே நிலையாக இருக்க மாட்டார்கள்” என தெரிவித்தார்.