2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24) முன்னாள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சசிகலா, புதிய கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார்.
அதில், கருப்பு, சிவப்பு வெள்ளை நிறத்துடன் இடையில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ளன.
சசிகலாவின் அறிவிப்பு குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “அதிமுக… அமமுகதான்.. 99.1சதவிகித தொண்டர்கள் ஒன்றிணைந்துவிட்டனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். திடீர் சாம்பார், திடீர் இட்லி போல திடீர் கட்சிகள் வரலாம்.
அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொன்னவர்களின் சாயம் இப்போது வெளுத்துவிட்டது. கடந்த 35 ஆண்டு காலமாக எனக்கு மட்டுமே தெரிந்த சில நபர்களின் உண்மை நிலை, இன்று தமிழக மக்களுக்கும் நன்றாகத் தெரியவந்துகொண்டிருக்கிறது.
அம்மாவின் ஆட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது.
நெல்மணிகள் நிறைந்த தோட்டத்தில் சிலவற்றைச் சிட்டுக்குருவிகளும், காக்கைகளும் கொத்திச் செல்வதால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமா என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
